மெக்ஸிகோவைச் சேர்ந்த விஞ்ஞான ஆசிரியர் ஒருவர், மாணவர்களுக்கு விஞ்ஞானம் கற்பிப்பதற்கு விநோதமான உபாயமொன்றை கையாள்கிறார். சுப்பர் ஹீரோ பாத்திரமான ஸ்பைடர் மேன் வேடமணிந்த நிலையில் அவர் பாடங்களைக் கற்பிக்கிறார்.
மோசஸ் வஸ்குவெஸ் என்பவரே இந்த ஆசிரியராவர். மெக்ஸிகோவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இவர் விரிவுரையாளராக பணியாற்றுகிறார் என ரோய்ட்ர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
26 வயதான வாஸ்குவெஸுக்கு இளம் தலைமுறையினரின் விருப்பு வெறுப்புகள் நன்கு தெரியும். இந்நிலையில் மாணவர்களுக்கு ஆர்வமூட்டுவதற்காக ஸ்பைடர் மேன் வேடமணிந்து வகுப்புக்கு வருகிறார்.
“ஏனைய எல்லோரையும் போன்றே நான் இப்பணியை செய்ய முடியும். இப்படியோர் ஆடை அணிந்து கொள்வதால் மாத்திரம் இந்த வகுப்பு உலகின் மிகச் சிறந்த வகுப்பறையாக மாறிவிடும் என நான் எண்ணவில்லை.
ஆனால், நான் மிகவும் நேர்மையும் அர்ப்பணிப்பும் கொண்டவன் என்பதனை உறுதிப்படுத்துகிறேன். இந்த வகுப்பறையை மேலும் சிறந்த ஓர் இடமாக்குவதே எனது நோக்கமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றரை வருடங்களு க்கு முன்னர் ஸ்பைடர் மேன் வேடத்தில் மோசஸ் வஸ்குவெஸ் ஆடையணிய ஆரம்பித்தபோது இது அவரின் தொழிலைப் பாதிக்கும் என்றே அவரின் குடும்பத்தினர் எண்ணினராம்.
ஆனால், மாணவர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது என வஸ்குவெஸ் தெரிவித்துள்ளார்.