உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, துப்பரவுத் தொழிலாளர்களுடன் இணைந்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டார்.
இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினமாகும். இதையொட்டி நாடு முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புதுவையிலும் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதில் ஒரு பகுதியாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, துப்புரவு தொழிலாளர்களுடன் சேர்ந்து குப்பை அள்ளி வீதிகளை சுத்தம் செய்தார்.
இன்று காலை புதுவையில் உள்ள செஞ்சி சாலை மற்றும் லால் பகதூர் சாஸ்திரி சாலையில் துப்புரவு தொழிலாளர்களுடன் சேர்ந்து குப்பைகளை அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
முகத்தில் மாஸ்க், கையில் கிளவுஸ் மற்றும் தலையில் தொப்பி போட்டுக் கொண்டு அவர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், இதை விளம்பரத்திற்காகவோ அல்லது பெயர் பத்திரிகைகளில் வரும் என்பதற்காகவோ செய்யவில்லை. புதுச்சேரி முழுவதும் தூய்மையான பகுதியாக மாறவேண்டும் என்பதற்காகவே இதை செய்கிறேன்.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் துப்புரவு தொழிலாளர்களுடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபடுவேன் என்றார் கிரண் பேடி.