தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பிரதமர் நரேந்திர மோடி முன் கூட்டியே, அதிமுகவுக்கு வாழ்த்து தெரிவித்ததால் தான் அதிமுக வெற்றி பெற்றதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் 93வது பிறந்தநாளையொட்டி, சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில், நேற்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள். கருணாநிதி ஏற்புரை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதில் ஒரு கருத்து அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், தேர்தல் முடிவு நாள் அன்று பிரதமர் நரேந்திர மோடியே காலை 10 மணிக்கு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செல்கிறார் என்றால், தேர்தல் முடிவு எப்படி முன்கூட்டியே தெரிந்தது.
இதை வெளிப்படையாக, பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இதற்கு, டெல்லியில் உள்ள மோடியின் கட்சிக்காரர்கள் விளக்க வேண்டும். அதற்கு முன்பே ஓட்டை எண்ணிப்பார்த்துவிட்டார்களா? இந்த கேள்விக்கு மாத்திரம் அவர்கள் பதில் சொன்னால் போதும்.
திருப்பூரில் 2 லாரிகளில் கைப்பற்றப்பட்ட ரூ.570 கோடி எப்படி வந்தது. இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்காவிட்டால், நாட்டில் புயல் வீசுகிற மாதிரியான போராட்டத்தை திமுக நடத்தும்.
எனவே, அதற்கு மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது.
ஒத்திவைப்பு என்றால் குறிப்பிட்ட தேதியில் அந்த தேர்தல் நடக்கும் என்று பொருள். அதிமுக வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து தான் ரத்து செய்திருக்கிறார்கள். அதை எண்ணிப்பார்த்து உண்மையை உணர்த்த வேண்டும்.
இதை கட்டளையாக எடுத்துக்கொள்ளாமல், அறிவிப்பாக எடுத்துக்கொண்டு நாம் அத்தனை பேரும் ஒன்றுகூடி தேர்தலை ஏன் நடத்தவில்லை என்று கேட்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி பேசினார். இந்த பேச்சு பாஜகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சி மாநில தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கையில் "காலை 10 மணிக்கே மோடி வாழ்த்து சொல்லி விட்டதால் தான், வெற்றி பறிபோய்விட்டது என்று கருணாநிதி புலம்புகிறார்.
ஆனால், தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி, டிவிட்டர் பதிவு செய்து இருப்பது சரியாக காலை 11:15 மணிக்கு தான்" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலத்தில் 'சிதம்பர' வெற்றிகள் இப்படி தான் சிதைத்து வாங்கப்பட்டதா? என்றும் கேள்வி அவர் எழுப்பியுள்ளார். தேர்தல் முடிவை மோடி முன்கூட்டியே அறிந்து கொண்டதாக கருணாநிதி குறிப்பிடுவதாக, அல்லது
மோடியின் வாழ்த்து, வாக்கு எண்ணும் ஊழியர்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக கருணாநிதி குறிப்பிடுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
"வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த உடனேயே 10 மணிக்கெல்லாம் மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியதும், அதிமுகவின் பணப்பட்டுவாடாவும்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு
முக்கிய காரணம்" என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சில தினங்கள் முன்பே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.