ஹாஸ்டலில் சேர ஆங்கில டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும் !

லயோலா கல்லூரி ஹாஸ்டலில் தங்க வேண்டுமானால் ஆங்கில டெஸ்டில் பாஸ் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் அதிருப்தி வெளிப்படுத்துகிறார்கள். 
குறிப்பாக சீனியர் மாணவர்களுக்குதான் இந்த கெடுபிடியாம். ஆங்கிலத்தில் எளிமையான கேள்விகளை கேட்டு அதற்கு பதிலளிக்க வேண்டும் என்பது ஹாஸ்டல் நிர்வாகத்தின் நிபந்தனையாம். வியாழக்கிழமை இந்த டெஸ்ட் நடத்தப்பட்டுள்ளது.  

50க்கு 20 மதிப்பெண்கள் எடுத்தால் ஹாஸ்டலில் தொடர்ந்து தங்கலாம், இல்லையேல், பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு வேறு ரூம் பார்க்க கிளம்ப வேண்டியதுதான் என்று புலம்புகிறார்கள் மாணவர்கள்.

ஹாஸ்டலில் போதிய இட வசதி இல்லாதது இதற்கு காரணமாம். புதிதாக வரும் ஜூனியர்களுக்கு இந்த டெஸ்ட் கிடையாது. சீனியர்களுக்கு மட்டுமே. வெளி மாவட்டத்தில்

இருந்து படிக்க வரும் பெரும்பாலானோர்தான் ஜூனியர்களாக இருப்பர். அவர்களுக்கு ரூம் தேடுவது கஷ்டம் என்பதால் கல்லூரி ஹாஸ்டல்களை ஒதுக்கிவிடுகிறதாம்.

சீனியர்களை பொறுத்தளவில் படிக்கவும் செய்யாமல் ஹாஸ்டலிலும் இடத்தை பிடித்துக்கொண்டு இருப்பது தேவையற்றது என்று கல்லூரி நிர்வாகம் கருதுகிறது. எனவே படிப்புக்கு சோதனை வைத்து ஹாஸ்டலில் ரூம் தர முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து லயோலா கல்லூரி செய்தி தொடர்பாளர், பேராசிரியர், அந்தோணி சாமி கூறுகையில், வெறுமனே இந்த ஆங்கில டெஸ்ட்டை வைத்து மட்டுமே மாணவர்களை ஹாஸ்டலை விட்டு வெளியேற்றுவதில்லை. 

அரியர்கள், ஒழுங்கீனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் முடிவெடுக்கப்படும் என்றார். இக்கல்லூரி ஹாஸ்டலில் 700-800 ரூம்கள்தான் உள்ளன. 

தங்கியுள்ள மாணவர்கள் எண்ணிக்கையோ 1500 என்ற அளவில் உள்ளது. எனவேதான் லயோலா நிர்வாகம் இந்த அதிரடியில் இறங்கியுள்ளது.
Tags:
Privacy and cookie settings