பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் மாம்பழச் சாறு வழங்கும் திட்டம் ஏதும் இல்லை என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஜெயலலிதா பதிலளித்து வருகிறார்.
முன்னதாக கேள்வி நேரத்தின் போது, பள்ளி மாணவர்களுக்கு மாம்பழச்சாறு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்ததை சுட்டிக்காட்டி திமுக உறுப்பினர் செங்குட்டுவன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவர்களின் ஆலோசனைப்படி மாணவர்களுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டத்தை தவிர்த்துவிட்டதாக தெரிவித்தார்.
சில மாணவர்களுக்கு மாம்பழச் சாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அத்திட்டத்தை அரசு கைவிட்டதாக கூறினார்.
இதனையடுத்து பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் பால் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.