தமிழகத்தில் பொறியியல் படிப்பு கலந்தாய்விற்கான ரேண்டம் எண்ணை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. தர வரிசைப் பட்டியல் வருகிற 22-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு 24ம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இவற்றில் சுமார் 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 722 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பொறியியல் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், 10 இலக்க ரேண்டம் எண், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட ரேண்டம் எண் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 22ம் தேதி வெளியிடப்பட உள்ளது. 24ம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கும், 25ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது.
ஜூன் 27ம் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் இந்த ஆண்டு தபால் மூலமாக அனுப்பப்பட மாட்டது.
எனவே, பல்கலைக்கழக இணையதளத்தில் பெயர், பிறந்தத் தேதி, பொறியியல் சேர்க்கை பதிவு எண் ஆகியவற்றை ஆன்-லைனில் பதிவு செய்து அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.