'வாட்ஸ்-அப்' சேவைக்கு தடை... உச்ச நீதிமன்றம் தள்ளுபடி !

வாட்ஸ்-அப் சமூக வலைதள சேவைக்கு இந்தியாவில் முழுமையாக தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தள்ளுபடி செய்தது.
குர்காவோனைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் சுதிர் யாதவ் தாக்கல் செய்த பொதுநல மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சுதிர் தனது மனுவை மத்திய அரசிடம் முன்வைக்குமாறும் அறிவுறுத்தியது.

'எண்ட் டு எண்ட் என்கிர்ப்ஷன்' எனக் குறிப்பிடப்படும் வசதியை வாட்ஸ் அப் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த வசதியால் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் செய்திகள் அனைத்தும் முன்பு இருந்ததைவிடப் பாதுகாப்பு மிக்கவையாகி இருக்கின்றன.

இதன் மூலம் வாட்ஸ் அப் சேவையில் பகிரப்படும் தகவல்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவை இனி மூன்றாம் நபர்களால் அணுக முடியாதவையாகி இருக்கின்றன. 

இதன் பொருள் வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி அனுப்பிவைத்தால் அதற்குரியவர் மட்டும் அதைப் படிக்க முடியும். மற்றவர்களுக்கு அந்தத் தகவல் கலைத்துப் போடப்பட்ட அர்த்தம் கொள்ள முடியாத குறியீடுகளாகவே தோன்றும்.

இந்நிலையில் இந்த புதிய 256-பிட் என்கிர்ப்ஷன் வசதியால் போலீஸ் விசாரணைக்கு முட்டுக்கட்டை ஏற்படும். குறிப்பாக தீவிரவாதம் தொடர்பான தகவல்களைப் பெறுவதில் தடை ஏற்படும்.

தேசிய நலன் கருதி சில வாட்ஸ் அப் தகவல்களை டிகிரிப்ஷன் செய்யலாம் என்றால்கூட வாட்ஸ் அப் சேவையில் டிகிரிப்ஷன் கோட் இல்லை.

எனவே, இந்தியாவில் 'வாட்ஸ்-அப்' சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என குர்காவோனைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் சுதிர் யாதவ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மனுவை தள்ளுபடி செய்ததோடு, மத்திய அரசுக்கு தனது மனுவை அனுப்பிவைக்குமாறு தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings