மொட்டையடித்து, பேண்ட், சட்டை அணிந்து ஆண் போல நடித்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்ணை முன்கூட்டியே தடுத்த போலீசார்,
அறிவுரை சொல்லி ஊருக்கு திருப்பி அனுப்பினர். ஆகமவிதிகள் அடிப்படையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை மீறி செல்பவர்களை தடுப்பதற்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டின் பெண் காவலர்களும், பெண் அதிகாரிகளும்,
இவர்களுடன் பெண் போலீசும் பம்பையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆனி மாத பூஜைகள் நடக்கிறது என்பதால் இவர்கள் விழிப்போடு காவல்காத்து வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, தலையை மொட்டை அடித்து, பேண்ட், சட்டை அணிந்த ஒருவர் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
பொதுவாக தாடி வளர்ந்துதான் பக்தர்கள் வருவது வழக்கம் என்பதால், இவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட தேவசம் அதிகாரிகள், பெண் போலீஸ் உதவியுடன் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 18 வயதாகும், கார்த்திகா (எ) லட்சுமி என்ற பெண் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை கோவில் சன்னிதானத்திற்கு அனுமதிக்காத போலீசாரும், அதிகாரிகளும் அவருக்கு அறிவுரை கூறி ஊருக்கு திருப்பி அனுப்பினர்.