காஷ்மீரை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைமையிடமாக மாற்ற முயற்சி நடப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி புரிந்த முகமது சிராஜுதின் என்பவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.
என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அவரிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானை தவிர்த்து காஷ்மீரை ஐ.எஸ் அமைப்பு அவர்களின் தலைமையிடமாக மாற்ற முயற்சிக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த தகவல் என்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மூலம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் தனது உரிமையாக கருதுகிறது என சாடினார். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அவர் மும்பையில் தாக்குதல் நடத்துவதற்கு காரணம் என்ன என்று வினவினார்.
தேசிய புலனாய்வு அமைப்பு இந்தியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
பல்வேறு நாடுகளில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் இணையதளங்களில் பகிர்ந்துக் கொள்ளக்கூடிய தகவல்களின் அடிப்படையில் ஐ.எஸ் அமைப்பின் திட்டம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.