ஆசிரியையுடன் மாயமான மாணவன் !

ஆசிரியையுடன் மாயமான மாணவன், தாயுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் டி.மாரியம்மாள்.

இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது 15 வயது மகன் சிவசுப்பிரமணியன், தென்காசியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஆண்டு, மார்ச் 31ம் தேதி பள்ளி சென்றவன், வீடு திரும்பவில்லை. 

இது குறித்து கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தேன். பின்னர் இந்த வழக்கு புளியங்குடி டிஎஸ்பி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஆசிரியையாக பணியாற்றிய கோதைலட்சுமி (29), எனது மகன் சிவசுப்பிரமணியனை கடத்தி சென்றுள்ளார். 

17 பவுன் நகை மற்றும் 10 ஆயிரத்தை என் மகன் எடுத்து சென்றுள்ளான். எனது மகனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புளியங்குடி டிஎஸ்பி ஜெயக்குமார் ஆஜராகி, மாணவனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினார். 

மாணவன் சிவசுப்பிரமணியன் மற்றும் ஆசிரியை கோதைலட்சுமி ஆகிய இருவரையும் திருப்பூரில் வைத்து பிடித்தாக கூறினார். தற்போது, கோதைலட்சுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

மாணவன் சிவ சுப்பிர மணியனிடம் நீதிபதிகள், ‘தற்போது உன்னை காப்பகத்தில் இருந்து போலீசார் அழைத்து வந்துள்ளனர். 

மீண்டும் காப்பகத்திற்கு செல்ல விருப்பமா அல்லது தாயுடன் செல்ல விருப்பமா’ என்றனர். தாயுடன் செல்வதாக அந்த மாணவன் கூறினான்.

இதையடுத்து, `மாணவன் விருப்பப்படி, தாயுடன் வீட்டுக்கு செல்லலாம். எனவே, இந்த மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘படிப்பை தொடர்வேன்’

நீதிமன்றத்தை விட்டு தாயுடன் வெளியே வந்த மாணவன் கூறுகையில், ‘‘நடந்த கசப்பான சம்பவத்தை மறக்க நினைக்கிறேன். பள்ளி படிப்பு பாதியில் நிற்கிறது. இதனால் எனது எதிர்காலம் பாதித்துள்ளது. 

எனவே, பள்ளிப் படிப்பை தொடர விரும்புகிறேன். நன்றாக படித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்,’’ என்றான்.
Tags:
Privacy and cookie settings