பயங்கரவாதிகள் தங்களுக்கு வரும் உத்தரவை, இந்திய ராணுவத்தினர் கண்டுபிடிக்காமல் இருக்க, ‛கால்குலேட்டர்' எனும் மொபைல் ‛ஆப்'பினை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளின் நடமாட்டங்களை, அவர்களின் மொபைல் போன்களின் மூலம் நமது ராணுவம் கண்காணித்து வருகிறது.
இதனால் அவர்கள் ராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பிக்க ‛கால்குலேட்டர்' எனும் மொபைல் ‛ஆப்'பினை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இது, சமீபத்தில் கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
‛கால்குலேட்டர்' மொபைல் ஆப் மூலம், வை-பை, மொபைல் வசதிகள் எதுவும் இல்லாமல் தங்களின் இருக்கும் இடத்தின் வரைபடங்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இத்துடன் இந்த ஆப் மூலம் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகளின் உத்தரவுகளையும் பெறுகின்றனர்.
காஷ்மீர் எல்லையில் கடந்த 2015ம் ஆண்டு 121 பயங்கவாத தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு 33 தாக்குதல்களும், 2014ம் ஆண்டு 222 தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு 65 தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.