தமிழகம் முழுவதும் ஜனவரியில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்க உணவு வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1.90 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகளுக்கு தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை
ஆகிய பொருட்களும், சிறப்பு வினியோக திட்டத்தின் கீழ் உளுந்தம்பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழத்தை பொறுத்தவரை கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது.
இந்த ரேஷன் கார்டுகள் கடந்த 2009ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டன. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டி பழைய கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரேஷன் கார்டுகள் தான் தற்போதும் புழக்கத்தில் உள்ளன. முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட காரணத்தால் ரேஷன் கார்டுகள் கந்தலாக மாறிவிட்டன.
இது தவிர போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதால் பொது வினியோக திட்டத்திற்கு அரசு வழங்கும் மானியத்தால் பல கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆதார் கார்டு பெற்றவர்களிடம் நேரடியாக பதிவு செய்து ஏடிஎம் கார்டு அளவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க உணவு வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ரேஷன் கடைகள் அனைத்திற்கும் பாயிண்ட் ஆப் ஸ்கேல் என்ற புதிய இயந்திரம் வழங்கப்பட இருக்கிறது.
பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இந்த இயந்திரம் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களுக்கு இந்த மாத இறுதியில் இயந்திரம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதனால் குடும்ப அங்கத்தினர் ஆதார் கார்டை நேரடியாக கடைக்கு கொண்டு சென்று இந்த இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
ஏடிஎம் கார்டு அளவில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு ஜனவரியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை உணவு வழங்கல் துறை தீவிரமாக செய்து வருகிறது.