மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் 3 மாத பெண் குழந்தையை தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
மராட்டியம் மாநிலம் புனேயில் உள்ள உந்திரி என்ற இடத்தை சேர்ந்தவர் சுசீலா. அவரது மகனுக்கு பெண் குழந்தை பிறந்து 3 மாதம் ஆகி இருந்தது.
அந்த குழந்தை பிறந்ததில் இருந்தே உடல் நலம் இல்லாமல் இருந்தது. ஏராளமாக செலவு செய்தார்கள்
ஆனால் உடல்நலம் சரியாக வில்லை. குழந்தை சிகிச்சைக்காக கடன் வாங்கி சிகிச்சை செய்தனர். இதற்கு மேலும் சிகிச்சை அளிக்க வீட்டில் பணம் இல்லை.
இதனால் குழந்தையை கொன்று விட சுசீலா முடிவு செய்தார். குழந்தையின் தாய்- தந்தை இல்லாத நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி வந்து குளியல் அறையில் இருந்த பீப்பாய் தண்ணீருக்குள் அமுக்கி கொன்றார்.
ஆனால் இது எதுவுமே தெரியாது போல சுசீலா வீட்டில் அமர்ந்து இருந்தார். அப்போது குழந்தையின் தாய்-தந்தை அங்கு வந்தனர். படுக்கையில் இருந்த குழந்தை காணவில்லை.
எனவே சுசீலாவிடம் கேட்டனர். அதற்கு அவர் குழந்தை என்ன ஆனது என்று எனக்கு தெரியாது? சிறிது நேரத்திற்கு முன்பு வாசல் பக்கம் 2 பெண்கள் நின்று கொண்டு இருந்ததை பார்த்தேன்.
அவர்கள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறினார். குழந்தை எங்கே என்று பெற்றோர்கள் அங்கும்-இங்கும் தேடினார்கள்.
அப்போது குழந்தை தண்ணீர் பீப்பாய்க்குள் இறந்து கிடந்தது தெரிந்தது. இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து விசாரித்த போது பாட்டியே குழந்தையை கொலை செய்து இருப்பது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.