சென்னை மாரத்தான் மரப்பாலம் உடைந்து 300 பெண்கள் காயம் !

1 minute read
சென்னையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான மாரத்தான் நிகழ்ச்சியின் போது, தீவுத்திடல் அருகே மரப்பாலம் உடைந்து விழுந்ததில், சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். 
சென்னை தீவுத்திடலில் பிங்கத்தான் தனியார் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது.

தீவுத்திடலில் இருந்து அடையாறு வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாரத்தானில் பெண்கள் மட்டுமே பங்குபெற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதிகாலையிலேயே தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

தீவுத்திடலில் கூவம் ஆற்றை இணைக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை மரப்பாலம் என்றே அனைவரும் அழைத்து வருகிறார்கள். இந்த பாலம் வழியாக எளிதாக தீவுத்திடலை அடையலாம். 

இந்நிலையில் மாரத்தானில் பங்கேற்க வந்திருந்த பெண்கள் இந்த மரப்பாலத்தின் வழியாக தீவுத்திடலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரே நேரத்தில் அதிக பெண்கள் பாலத்தில் ஏறி, கடக்க முயற்சித்தனர். 

இதில், திடீரென்று மரப்பாலத்தின் நடுப்பகுதி சரிந்து, உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக பாலத்தில் சிக்கியிருந்த பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கூவம் ஆற்றில் நீர் குறைவான அளவே இருந்ததால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பாதை அடைக்கப்பட்டது. 

இதையடுத்து மாரத்தான் ஓட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டது. ஏற்கனவே மரப்பாலத்தின் உறுதித்தன்மையை சோதிக்க வேண்டும் என்றும், 

பராமரிப்பு பணியை மேற்கொண்டு புதிய தடுப்பு கட்டைகள் போட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், இத்தகைய விபத்து ஏற்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
Tags:
Privacy and cookie settings