சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவ மனையில் கண் பார்வை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 20 பேருக்கு பார்வை பாதிக்கப் பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ செம்மலை மருத்துவ மனைக்கு சென்று ஆய்வு மேற் கொண்டுள்ளார். மேட்டூரில் உள்ள அரசு மருத்துவ மனையில் கண் சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது.
இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண் அருவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பலரும் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் பலருக்கு கண்ணில் எரிச்சல் மற்றும் புண் ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவமனைக்குச் சென்ற நோயாளிகள், டாக்டர்களிடம் முறையிட்டுள்ளனர்.
இதன் பின்னர் டாக்டர்கள் சில மருந்துகள் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்களில் 20 பேருக்கு கண்ணில் புண்கள் அதிகமானது.
இதனால், அவர்களது பார்வைத் திறன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை பாதிக்கப்பட்ட 20 பேரும், மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
அங்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. பதட்டம் நிலவியதுடன், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர்களில் 10 பேர் கோவையிலும், மூன்று பேர் சேலத்திலும், மீதம் உள்ளவர்கள் பிற நகரங்களிலும் உள்ள மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக சேலத்தில் இருந்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இது குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டபோது, "அறுவை சிகிச்சை செய்தபின் ஏற்படும் வழக்கமான விளைவுகள் தான் என்றும் சில நாட்களில் சரியாகிவிடும்" என்றும் விளக்கமளித்து உள்ளனர்.
பாதிக்கப்பட்ட 20 பேரையும் சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பாதிப்பு அறுவை சிகிச்சையினால் ஏற்பட்டதுதானா என்பது குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே மேட்டூர் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ செம்மலை ஆய்வு செய்து பார்வை பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களை செம்மலை கேட்டறிந்தார்.
மேட்டூர் அரசு மருத்துவமனையில் பார்வை பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு செய்ய குழு என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து இன்று மாலை உயர்மட்ட ஆய்வுக்குழு சேலம் செல்ல உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.