20 செயற்கைகோளுடன் விண்ணில் பாய உள்ள பி.எஸ்.எல்.வி.- சி34 ராக்கெட் !

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை மறுநாள் (22-ந் தேதி) 20 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. 
காலை 9.25 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.
இந்த 20 செயற்கை கோள்களில் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 17 செயற்கை கோள்களும் அடங்கும்.

மேலும் சென்னை சத்திய பாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த 1.5 கிலோ எடை கொண்ட சத்யபாமாசாட், புனே என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த ஸ்லயம் ஆகிய செயற்கைகோள்களும் அடங்கும்.

பி.எஸ்.எல்.வி. சி-34 நவீன மோட்டார் கருவி பொருத்தப்பட்ட எக்ஸ்.எல் வகையில் 14-வது ராக்கெட் ஆகும். இதன் எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர் ஆகும்.

பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் சுமந்து செல்லவுள்ள முதன்மை செயற்கைகோள் கார்டோசாட்2 ஆகும். இந்த செயற்கைகோள் பூமியை படமெடுத்து அனுப்புதல்,

கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும். இந்த செயற்கைகோளின் எடை 727.5 கிலோ ஆகும். பூமியில் இருந்து 505 கி.மீ தொலைவில் செயற்கைகோள் நிலைநிறுத்தப்படும்.

இந்த செயற்கைகோளில் 986 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இந்தோனேசியாவின் லெபன் ஏ3, ஜெர்மனியின் பிரோஸ், கனடாவின் எம்3 எம் சாட், ஜி.எச்.ஜி சாட்-டி, அமெரிக்காவின் ஸ்கைசாட் ஜென் 2-1, டவ் வகையை சேர்ந்த 12 செயற்கை கோள்கள் போன்றவையும் 

இதனுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்தியா விண்ணில் செலுத்தியுள்ள செயற்கை கோள்களின் ‘கார்டோசாட் 2’ பல விதங்களில் வித்தியாசமானது. 

இதன் 2 கேமராக்கள் 2½ மீட்டர் விட்டத்தில் இருக்கும் எந்தவொரு பொருளையும் விண்ணிலிருந்து முப்பரிமாணத்தில் 30 கிலோ மீட்டர் பரப்பளவில் கருப்பு-வெள்ளை படங்களாக எடுக்கும்.

இந்த கேமராக்களை செயற்கைகோளின் சுழற்சியையொட்டி கோணங்களை மாற்றி ஒரே பொருளை இருவேறு கோணங்களில் படமெடுத்து 3டி படங்களை தரக்கட்டுப்பாட்டு அறையில் பெற்றுக் கொள்ளலாம். 

தரக்கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள முடியாத நேரங்களில் இந்த படங்களை 120 ஜி.பி அளவில் சேமிக்கவும் வசதி உள்ளது.

இதுவரை தரமான படங்களை அமெரிக்காவில் இருந்து அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருந்தது. இந்த செயற்கைகோள் மூலம் குறைந்த விலையிலேயே படங்களை பெற முடியும்.

இந்த செயற்கைகோள் மூலம் நீர்வள மேம்பாடு, காடுகள் அழிக்கப்படுவதை கணித்து தடுத்தல், மக்கள் குடியிருப்புகளை திட்டமிட்டு செம்மைப்படுத்துதல் போன்ற பணிகளை செய்யலாம். 

பெருநகர மேம்பாட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு இது துணையாக இருக்கும். பி.எஸ்.எல்.வி.-சி34 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுன் 

இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ கூறி இருந்தது. அதன்படி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுன் இன்று காலை தொடங்கியது.

முன்னதாக மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் கிரண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தன்னிறைவு பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. என்ஜின் தொழில் நுட்பத்துக்காக வளர்ந்த நாடுகளை சார்ந்திருக்கும்

நிலைமையை மாற்றி வருகிறோம். நமது செயற்கைகோள்கள் மட்டுமின்றி வெளிநாடுகளின் செயற்கைகோள்களையும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கிறோம்.

அந்த வகையில் வருகிற 22-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து 20 புதிய செயற்கைகோள்களை விண்வெளியில் ஏவப்பட உள்ளது.

மேலும் ஜி.எஸ்.எல்.வி. மாக்2 ராக்கெட் ஆகஸ்டு மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. இது பூமியின் தட்பவெப்பம், ஈரப்பதம் மற்றும் முப்பரிமாண படங்கள் ஆகியவற்றை சேகரித்து அனுப்பக்கூடியது. 

இதன் மூலம் பூமியில் உருவாகும் திடீர் புயல் போன்ற தட்பவெப்ப மாறுதல்களை துல்லியமாகக் கூறமுடியும். இது வானிலை ஆய்வு மையத்துக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
விரைவில் ஆண்டுக்கு 2 ஜி.எஸ்.எல்.வி. மாக்2 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்த இலக்கு எட்டப்படுமானால் உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இடம் பெறும்.

ஜி.எஸ்.எல்.வி. மாக்3 ராக்கெட் டிசம்பர் மாதம் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 4 டன் எடையுள்ள செயற்கைகோள்களை விண்வெளிக்கு எடுத்து செல்ல முடியும்.

செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி விட்டு மீண்டும் திரும்பும் மறு பயன்பாட்டு விண்வெளி வாகனம் தொடர்பான ஆய்வுகள் பரிசோதனை முறையில் உள்ளது. 

விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான செலவு மிக மிக குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:
Privacy and cookie settings