தமிழக சட்டசபை வித்தியாசமானதாக இருக்கப் போகிறது இந்த முறை. மொத்தமே நான்கு கட்சிகள்தான் சட்டசபைக்குள் நுழையப் போகின்றன. தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
இதில் எடுத்த எடுப்பிலேயே அதிமுக முன்னணிக்குப் போய் விட்டது. தொடர்ந்து அது முன்னணியில் இருந்து வருகிறது.
இந்தத் தேர்தலில் 6 முனைப் போட்டி நிலவியது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள முடிவுகளைப் பார்த்தால் அது வெறும் 3 முனைப் போட்டியாக மட்டுமே காணப்படுகிறது. அதிமுக, திமுக கூட்டணிகள் மற்றும் பாமக மட்டுமே இந்தத் தேர்தலில் பலன் அடைந்துள்ளன.
மற்றவற்றை மக்கள் நிராகரித்துள்ளனர். இதன் மூலம் இந்த சட்டசபையில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் மட்டுமே நுழையும் நிலையில் உள்ளன.
நடப்பு சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தேமுதிக ஒரு இடத்தில் கூட முன்னணியில் இல்லை. அதேபோல விடுதலைச் சிறுத்தைகள், பாஜக போன்றவற்றுக்கும் மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.
இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டசபை மிகக் குறைந்த கட்சிகளை மட்டுமே உறுப்பினராக காணவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுவரை இந்த அளவுக்கு குறைந்த கட்சிகளை தமிழக சட்டசபை கண்டதில்லை என்பதும் முக்கியமானது.