சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் ஜோதிசித்தார்த்தா, இரண்டாம் இதயம் என அழைக்கப்படும் பின்னங்காலில் ரத்தம் உறைவதை தடுக்கும் வகையில் பின்னங்காலில்
இரண்டாம் இதயத்தை தூண்டும் கருவியை (பெரிபெரல் ஹார்ட் ஸ்டிமுலேட்டர்) உருவாக்கியுள்ளார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சைப் பிரிவு கருத்தரங்கு கூடத்தில் புதிய கருவி உருவாக்கத்துக்கான செயல்முறை விளக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதற்கு கல்லூரி டீன் (பொறுப்பு) மகேஸ்வரி தலைமை வகித்தார். அறுவை சிகிச்சைப் பிரிவு துறை பேராசிரியர்கள் கே.ஜி.சுபாங்கி, காளி ரத்தினம், செல்வராஜ், அமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் ஜோதிசித்தார்த்தா, தான் உருவாக்கிய பின்னங்காலில் இரண்டாம் இதயத்தை தூண்டும் கருவி குறித்து விளக்கியதாவது:
காலில் உள்ள பின்னங்கால் தசைகள் சுருங்கி விரி யும்போது ரத்த ஓட்டமானது இதயத்தை நோக்கி மேலே பாயும். ஆகையால் கால் தசைகள் இரண்டாம் இதயம் என அழைக்கப்படுகிறது.
நீண்ட நாட்கள் மருத் துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள், வயது முதிர்ந்தோர், அறுவை சிகிச்சை செய்து எழுந்து நடக்க முடியாத நோயாளிகள் ஆகியோருக்கு கால் தசை நார்கள் செயல்படாததால் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
இதனால் காலில் ரத்தம் உறைவதற்கான வாய்ப்பு அதிகம். ரத்தம் உறைந்து சிறு துகள்களாகப் பிரிந்து அவை நுரையீரலில் ரத்த ஓட்டத்தை தடுத்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்.
இதை தடுக்கும் விதமாக இரண்டாம் இதயமான காலில் உள்ள தசை நார்களை தூண்டும் கருவி மூலமாக வேலை செய்ய வைத்து ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
ரத்த உறைதலை தடுக்கப் பயன்படும் பிற மருந்துகளில் ஆபத்தான பின்விளைவுகள் உண்டு. ஆனால், இந்த கருவியில் எந்தவித பின்விளைவுகளும் கிடையாது என்றார்.
மருத்துவக் கல்லூரி பொது அறுவை சிகிச்சைப் பிரிவு துறை பேராசிரியர் கே.ஜி.சுபாங்கி கூறியதாவது:
கால் தசைகள் இரண்டாம் இதயம் ஆகும். காலில் உள்ள ரத்த நாளங்கள் மூலம் இதயத்துக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
கால்களில் இயக்கமில்லாதபோது ரத்தம் உறைய வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்கவும், இரண்டாம் இதயத்தை தூண் டும் வகையில் புதிய கருவியை மாணவர் உருவாக்கியுள்ளார் என்றார்.