ராஜஸ்தானில் கார் மோதி 3 பேர் பலியான வழக்கில் தொடர்புடைய எம்.எல்.ஏ.வின் மகனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உள்ளூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானின் பதேபூர் தொகுதியை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. நந்த்கிஷோர் மஹரியா.
இவரது மகன் சித்தார்த். கடந்த ஜூலை 2ந்தேதி பி.எம்.டபிள்யூ. காரில் மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் சென்ற சித்தார்த் ஆட்டோ ரிக்ஷா ஒன்றின் மீது மோதியுள்ளார்.
அதன்பின், போலீஸ் வேன் ஒன்றின் மீது மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் இருந்த 4 பேரில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.
உதவி துணை ஆய்வாளர் ஒருவர் உள்பட 4 போலீசாரும் இதில் காயமடைந்தனர். இச்சம்பவத்தினை அடுத்து சித்தார்த்திற்கு உடனடியாக சுவாச ஆய்வு செய்யப்பட்டது.
அதில் ஆல்கஹால் அளவு அனுமதிக்கப்பட்ட 30 மி.கிராம்/100 மி.லிட்டர் என்ற அளவில் இல்லாமல் 152 மி.கிராம்/100 மி.லிட்டர் என்ற அளவில் இருந்தது கண்டறியப்பட்டது.
எனினும், காரை நான் ஓட்டவில்லை என கூறிய சித்தார்த் மது அருந்தவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெருநகர நீதிமன்றத்தின் முன் சித்தார்த் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூலை 24ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.