மகிழ்ச்சியான விஷயங்களை அந்தந்த கணத்தில் அனுபவிப்பதோடு செல்ஃபிக்களாலும், புகைப் படங்களாகவும் வருங்காலத்துக்கு பதிவேற்றம் செய்வதில் இன்றைய தலை முறையினர் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்,
குறிப்பாக திருமண வைபோகங்கள். சமூக வலை தளங்களில் பகிர்வதற்காகவே மெனக்கெட்டு வித்தியாசமாகவும், விலையுயர்ந்த கேமராக்கள் கொண்டும் படங்கள் எடுக்கின்றனர்.
இதற்கிடையில் சற்று வித்தியாசமாக, இஸ்ரேலை சேர்ந்த புகைப்பட கலைஞர் செபி பெர்கர்சன், உதய்ப்பூரில் மூன்று நாட்கள்
பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில், ஐபோன் 6S ப்ளஸ் மட்டுமே பயன்படுத்தி முழு திருமண நிகழ்ச்சியையும் படம் பிடித்துள்ளார்.
சாதாரணமாக DSLR கேமராக்களில் எடுக்கும் புகைப்படங்களை போல அல்லாமல், ஐபோனில் எடுக்கப் பட்டிருக்கும் இந்த படங்கள் ஓவியங்களை போல மிளிர்கின்றன.
ஒரு முழு திருமண நிகழ்வையும் பெரிய கேமராக்கள் இல்லாமல் ஐபோனின் கேமராவை மட்டும் கொண்டே படம் பிடிக்க வேண்டும் என்பது இவரது கனவாக இருந்து வந்துள்ளது.
DSLR கேமராக்களில் புகைப்படம் எடுக்கப்படும் போது படம் எடுக்கப்படும் பொருட்களுக்கும், போட்டோ எடுப்பவருக்கும் இடையே ஒருவித தடை ஏற்பட்டு விடுகிறது.
போனின் கேமராவில் எடுக்கும் போது போட்டோ எடுப்பவரும் அந்த frame- னுள்ளே வந்து விடுவது போன்றதொரு உணர்வு ஏற்பட்டு விடுவதால் ரசித்து ரசித்து, வித்தியாசமான ஆங்கிள்களில் எடுக்க முடிகிறது.
ஐபோனை மற்ற கேமராக்களை போல கண்ணுக்கருகே வைத்து படம் பிடிக்க தேவை இல்லாததால் போட்டோ பிடிக்கப்படும் பொருட்களோடும் ஆட்களோடும் eye contact கிடைக்கிறது என்கிறார் செபி.
மணமக்கள் அபிஷேக்கும் ஆயூஷியும் தன்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்ததாலேயே, இது சாத்தியமானது என்று கூறும் செபி,
இப்படி ஐபோனில் ப்ரொபஷனலாக படங்கள் எடுப்பதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக மங்கலான ஒளியில் எடுக்கும் போது கூடுதல் சிரமம்” என்கிறார்.
திருமண நடன மேடையில் படங்கள் எடுக்கும் போது, இதற்காகவே கையில் ஒரு LED லைட் பிடித்துக் கொண்டு படம் எடுத்ததாகவும் கூறுகிறார்.
இப்படி செல்போன் கேமராவில் எடுக்கப் பட்டிருக்கும் புகைப்படங்கள் சின்ன சைசில் பார்க்கும் போது நன்றாக இருக்கிறது. ஆனால் பிரிண்ட் செய்து பார்த்தால் தெளிவாக இருக்காது என்று குறை கூறுபவர்கள்
ஒரு பக்கம் இருந்தாலும், கலைத்துவமாக எடுக்கப் பட்டிருக்கும் இந்த வண்ண மயமான புகைப்படங்கள் பார்ப்ப வரை மெய் மறக்கத் தான் செய்கின்றன.