மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்காததால்... வாழ்க்கை கேள்விக் குறி !

இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்காததால் 5 தனியார் மருத்துவக் கல்லூரி களில் எம்பிபிஎஸ் படித்த 900 பேரின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.
மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்காததால்... வாழ்க்கை கேள்விக் குறி !
தமிழகத்தில் 2016-2017-ம் கல்வி ஆண்டுக்கு, தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி உட்பட 21 அரசு மருத்துவக் கல்லூரிகள் 

மற்றும் 6 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) அனுமதி அளித்துள்ளது.

தேவையான வசதிகள் இல்லாத தால், மற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடந்த இந்த ஆண்டு எம்சிஐ அனுமதி வழங்கவில்லை.

எம்சிஐ அனுமதி கிடைக்காத 5 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பு முடித்த 900 மாணவர்கள் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இதனால் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எம்பிபிஎஸ் படித்த 900 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

டாக்டராக பணியாற்ற முடியாது

இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறியதாவது: 
முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் 2015-2016 மற்றும் 2016-2017-ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு எம்சிஐ அனுமதி வழங்கவில்லை.

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி மருத்துவக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் 

அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரியில் 2016-2017-ம் கல்வி ஆண்டுக்கு எம்பிபிஎஸ் படிப்புக் கான மாணவர் சேர்க்கைக்கு எம்சிஐ அனுமதி வழங்கவில்லை.

இந்த 5 தனியார் கல்லூரிகளிலும் தலா 150 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 750 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்காத 

இந்த 5 தனியார் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலமும், நிர்வாக ஒதுக்கீட்டிலும் எம்பிபிஎஸ் படிப்பை முடித்த 750 மாணவர்கள் பயிற்சி டாக்டராகவும் பணியாற்ற முடியாது. 

மருத்துவக் கவுன்சிலிலும் பதிவு செய்ய முடியாது. அவர்களால் எங்கும் டாக்டராகவும் பணியாற்ற முடியாது.

கடந்த ஆண்டு முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்த 150 மாணவர்கள் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி பயிற்சி டாக்டராக பணியாற்றினர். 
ஆனால் அந்த 150 மாணவர்கள் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது. எங்கும் டாக்டராகவும் பணியாற்ற முடியாது. அவர்கள் படித்த கல்லூரிக்கு எப்போது எம்சிஐ அனுமதி வழங்குகிறதோ,

அப்போது தான் எம்பிபிஎஸ் படித்த 900 மாணவர்கள் மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியும். இது தான் எம்சிஐ-யின் விதிமுறையாகும் என்று அவர் தெரிவித்தார்.

நீதிமன்றம் தீர்ப்பு

இதுபற்றி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.தங்க சிவனிடம் கேட்ட போது, எம்சிஐ அனுமதி வழங்கிய தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருகின்றனர். 

மாணவர்கள் படித்து முடிக்கும் போது, கல்லூரிக்கு அனுமதியில்லை என்றால் அது கல்லூரி நிர்வாகம் மற்றும் எம்சிஐ தான் முழு காரணம். இதற்கு மாணவர்கள் என்ன செய்வார்கள்.

மாணவர்கள் பயிற்சி டாக்டராக பணியாற்றவும், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்ட ராக பணியாற்ற முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது” என்று தெரிவித்தார்.

எனினும், இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் ஆகியன இந்த தீர்ப்புக்கு தடை வாங்கியுள்ளதாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் கே.செந்தில் விளக்கமளித்தார்.
அனுமதிக்க வேண்டும்

இதுபற்றி மாதா மருத்துவக் கல்லூரி தலைவர் எஸ்.பீட்டரிடம் கேட்ட போது, எம்சிஐ அனுமதி வழங்கிய தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தான் மாணவர்கள் எம்பிபிஎஸ் படிக்கின்றனர். 

ஆனால் அடுத்தடுத்த ஆண்டில் கல்லூரிக்கு எம்சிஐ அனுமதி வழங்கவில்லை. 

ஆனால் ஏற்கெனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் படிப்புக்கு எந்த தடையையும் எம்சிஐ மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் விதிக்கவில்லை.

ஆனால் படித்து முடித்து விட்டு வரும் மாணவர்கள் பயிற்சி டாக்டராக பணியாற்றக் கூடாது. மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியாது என்று சொல்வது சரியானதாக இல்லை. 

மாணவர் களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, அவர்கள் பயிற்சி டாக்டராக பணியாற்றவும், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்றவும் அனுமதிக்க வேண்டும்.

இந்த ஆண்டு எம்பிபிஎஸ் முடித்துள்ள மாணவர்கள் பயிற்சி டாக்டராக பணியாற்ற நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியுள்ளனர் என்றார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. 

எம்சிஐ அனுமதி வழங்க வில்லை என்றாலும், கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பட்டத்தை பல்கலைக்கழகம் வழங்குகிறது.

பட்டத்தை வழங்கிவிட்டு, மாணவர்கள் பயிற்சி டாக்டராக பணியாற்ற முடியாது. மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து டாக்டராக பணியாற்ற முடியாது என்று சொல்வது என்ன நியாயம். 

கல்லூரிக்கு அனுமதி கிடைத்தப் பிறகு, பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பட்டம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings