விரைவில் ரிலீஸாகிறது அம்மா தியேட்டர் | Amma Theatre !

சென்னை நகரில் 2 இடங்களில் அம்மா தியேட்டர்கள் வரவுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் முடுக்க விட்டுள்ளனர். அம்மா திட்டங்கள் வரிசையில் முதலில் வந்தது அம்மா உணவகம். 
இது ஹிட் ஆனதைத் தொடர்ந்து அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமென்ட் என ஏகப்பட்ட திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில் அடுத்து அம்மா தியேட்டர் வரவுள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இரண்டு இடங்களில் அம்மா தியேட்டர் வரவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி முடுக்க விட்டுள்ளது.

ஷெனாய் நகரில் ஒரு தியேட்டரும், தி.நகரில் இன்னொரு தியேட்டரும் திறக்கப்படவுள்ளது. அம்மா அரங்கம் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

இதற்காக தனியாக தியேட்டர்கள் கட்டப்படவில்லை. ஏற்கனவே உள்ள மாநகராட்சி அரங்கங்களையே அப்படியே அம்மா அரங்கம் என்று மாற்றுகின்றனர்.

இதில் ஷெனாய் நகரில் வரும் அரங்கம் 3000 பேர் அமரக் கூடிய அளவுக்கு பிரமாண்டமானது. முழுமையாக ஏசி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தி நகரில் உள்ள பிரபலமான பிட்டி தியாகராயர் அரங்கமும் முழுமையாக ஏசி செய்யப்பட்டது. 

இந்த இரண்டு அரங்கங்களையும் முழு அளவில் தியேட்டராக மாற்ற தீவிர நடவடிக்கைகள் முடுக்க விடப்பட்டுள்ளன. நலிவடைந்த பிரிவினரை இலக்காக கொண்டு இந்த அம்மா தியேட்டர் அமைவதால்

இங்கு டிக்கெட் கட்டணம் மிகக் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. அதாவது குறைந்தது ரூ. 10 என்றும் அதிகபட்சம் ரூ. 30 என்றும் நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

முதல் கட்டமாக இந்த இரு தியேட்டர்களைத் திறந்த பின்னர் மேலும் சில அம்மா தியேட்டர்களைக் கட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முகப்பேர் கிழக்கில் உள்ள தமிழக மின்வாரியத்திற்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் படவுள்ளது. 

அங்கு அம்மா தியேட்டர் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதே போல சேத்தப்பட்டில் ஒரு இடம் பார்க்கப்பட்டுள்ளதாம். அங்கும் ஒரு தியேட்டர் கட்டப்படும் என்று தெரிகிறது.
Tags:
Privacy and cookie settings