சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட
ராம்குமாரிடம் கடந்த 13-ம் தேதி மாலை முதல் 15-ம் தேதி மாலை வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது.
ராம்குமாரிடம் போலீஸ் காவலில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் ,
எங்கள் விசாரணையில் ராம்குமார் இருந்த போது 13-ம் தேதி நள்ளிரவில் ரயில் போக்குவரத்து இல்லாத சமயத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றோம்.
பயணிகள், பொதுமக்கள் இல்லாத நேரத்தில் எந்த மீடியாக்களுக்கும் தகவல் கசியாத வகையில் ராம்குமாரை அங்கு கொண்டு சென்றோம். பின்னர் கொலை செய்த விதத்தை நடித்து காட்ட சொன்னோம்.
கொலை நடந்த தினத்தன்று ராம்குமார் வந்த வழி, சுவாதியை எங்கே எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தார், பின்னர் அவரை நெருங்கி வெட்டிய விதம், வெட்டு விழுந்த விதம், எத்தனை முறை வெட்டினார்,
தப்பி ஓடிய விதம், எந்த வழியாக தப்பி ஓடினார். அரிவாளை தூக்கி எறிந்த இடம், மேன்ஷனுக்கு கடந்து சென்ற தெருக்கள் போன்றவற்றை நடித்துக் காட்டினார்.
நாங்கள் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளோம். ராம்குமார் ரயில் நிலையத்தில் இருந்து தப்பி செல்லும் காட்சிகள் 3 சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.
ராம்குமாரும்,வீடியோ காட்சியில் இருக்கும் நபரும் ஒருவர்தானா என்பதை கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி யுள்ளோம். முடிவு வந்ததும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
ராம்குமார் ஆத்திரத்தில் சுவாதியை வெட்டிக் கொன்று விட்டதாகவும் இப்போது நினைத்தால் மிகுந்த வருத்தமாக இருக்கிறது" என்றும் கூறியதாக தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் ராம்குமார் சென்னை வந்துள்ளார். அரியர்ஸ் எழுதுவதற்காக கோச்சிங் செல்வதற்காக சென்னை வந்ததாக சொல்லப் படுகிறது.
அப்படி தான் சுவாதியை பார்த்துள்ளார். விசாரணையில் அவர் முழுமையாக ஒத்துழைத் துள்ளதாகவும் அதிகம் பேசுவதில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை வேறு எந்த கைதிகளுடனும் பேச போலீசார் அனுமதிக்கவில்லை.
அவருக்கு 3 போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் பேச அனுமதிக்கப் பட்டுள்ளது.
ஆனால் ராம்குமார் இதுவரை தனது பெற்றோரையோ அல்லது உறவினர்களையோ சந்திக்க வேண்டு மென்று கூறியது இல்லை என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.