வங்கதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் மீது தாக்குதல் நடத்திய 6 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஹோட்டலில் பிணையக் கைதிகளாக இருந்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
டாக்காவில் வெளிநாட்டு தூதரகங்கள் அதிகம் உள்ள குல்ஷன் பகுதியில் ஹோலி ஆர்டிசன் பேக்கரி உணவகத்தில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.
வெளிநாட்டினர் அதிகம் வந்துசெல்லும் இந்த விடுதிக்குள் 20-க்கும் மேற்பட்டோரை பிணையக்கைதிகளாக அவர்கள் பிடித்து வைத்திருந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு அதிரடியாக நுழைந்த கமாண்டோ படையினர் உள்ளே இருந்த 6 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலின்போது உணவகத்தின் உள்ளே இருந்து ஒரு ஜப்பானியர் உள்பட இருவர் வெளியே தப்பி ஓடி வந்தனர்.
தீவிரவாதிரகள் பிடித்து வைத்திருந்த 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் இந்தியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் உள்ளதாகவும், அவர்களில் சிலர் காயம் அடைந்திருப்பதாகவும் டாக்காவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.