சாய்னா நேவால், மார்ச் 17, 1990-ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸ்ஸாரில் பிறந்தார். அப்பா, அம்மா இருவருமே இளம் வயதில் தேசிய அளவில் பாட்மின்டனில் ஜொலித்தவர்கள்.
பெண் குழந்தை பிறந்து விட்டதே என சாய்னாவின் பாட்டிக்கு ஏகத்துக்கும் வருத்தம். அதனால் தன் மகளை ஆண் பிள்ளை போலத் தைரியமாக வளர்க்க எண்ணி முதலில் கராத்தே கற்றுக்கொள்ள அனுப்பினார் அம்மா உஷா ராணி.
கராத்தேவில் பிரவுன் பெல்ட் தகுதி பெற்ற சாய்னா, எட்டாவது வயதில் பாட்மின்டன் மட்டையைக் கையில் எடுத்தார். அப்பா ஹைதராபாத்துக்கு மாற்றல் ஆக, நானி பிரசாத் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றார் சாய்னா.
தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் லால் பகதூர் மைதானத்துக்கு தந்தையுடன் பயிற்சிக்காகச் செல்வார்.
14 வயதில் தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் வாங்கி, அனைவரையும் அசத்தினார். ‘நான் திறமையுடன் பிறந்த ஆட்டக்காரி இல்லை. இன்னும் சொல்லப்போனால்,
கராத்தே பிடிக்காமல் தான் இங்கே வந்தேன். ஓயாமல் உழைத்தேன். ஆசிரியரை மதித்தேன். அதனால் தான் இவ்வளவு தூரம் உயர முடிந்தது’- சாம்பியன் ஆனதும் சாய்னா சொன்னது இது.
காமன்வெல்த் போட்டிகளில் குட்டியூண்டு பெண்ணாகக் கலந்துகொண்டு முழு அணியையும் ஊக்குவித்து, வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒற்றையர் பிரிவில் வெண்கலம் கிடைத்தது.
ஒலிம்பிக்கில் கால் இறுதி வரை சென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். உலகின் மிகக் கடினமான மூன்று சூப்பர் சீரீஸ் பட்டங்களைத் தொடர்ந்து வென்றார்.
அப்போது இவரின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து ‘ஒரு பேரனால்கூட இவ்வளவு பெருமை வந்து இருக்காது’ என இவரது பாட்டி சொன்னபோது கண் கலங்கியதாகச் சொல்வார் சாய்னா.
அமைதியாகப் பேசும் சாய்னா, ஆட்டத்தில் அசுரப் பாய்ச்சல் காட்டுவார். ”விளையாட்டில் மனம் சலனப்படாமல், எதிராளி யார் எனக் கவலைப்படாமல் இயல்பாக ஆடுவதே நான் தொடர்ந்து ஜெயிக்கக் காரணம்” என்று தனது வெற்றியின் ரகசியத்தைச் சொல்கிறார்.
டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப்-ஐ எனக்கு ரொம்பப் பிடிக்கும். தோழிகள் எல்லோரும் ஸ்டெஃபி சாய்னா என்றே அழைப்பார்கள்.
பாட்மின்டனில் பெரிய அளவில் பெயர் பெற்றதும் அந்தப் பெயரில் கூப்பிடுவதை நிறுத்தச் சொல்லி தோழிகளுக்கு அன்புக் கட்டளை போட்டுவிட்டார்.
செல்போன்கள் மீது ஆர்வம் அதிகம். மரியா ஷரபோவா தோன்றிய மொபைல் விளம்பரத்தில் மனதைப் பறிக்கொடுத்து, அப்பாவிடம் அந்த மொபைல் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கினார். தற்போது ஐ போன் சாய்னாவின் ஃபேவரிட்.
நாளைக்கே இது மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவ்வளவு வெரைட்டிகளில் விதம் விதமாக போன்கள் இவரிடம் உண்டு.
இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பெறும் மிக உயரிய விருதான ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை இவர் பெற்றபோது, வயது 19 மட்டுமே. உலக அளவில் இரண்டாவது ரேங்க் வரை உயர்ந்து இருக்கிறார்.
”ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது கனவு, உலக அளவில் முதல் ரேங்க்கும் என் இலக்கு!’ என்று கூறியிருந்தார். அதன்படி உலக தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
பாட்மின்டனில் ஜொலிப்பதற்காக சாய்னா தியாகம் செய்தவை ஏராளம். பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதாமல் போட்டியில் பங்கேற்று இருக்கிறார்.
கடந்த எட்டு வருடங்களாகப் பெற்றோருடன் சினிமா, கடற்கரை, ஹோட்டல், சுற்றுலா என எங்கும் சென்றது இல்லை. ஓயாமல் பயிற்சி, போட்டி என எப்போதும் இலக்கை நோக்கி உழைப்பு தான்.
இளம் வயதில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது சக ஆண் பிள்ளை கள் தங்களின் முஷ்டியை மடக்கிக் காண்பித்து சாய்னாவைப் பயமுறுத்து வார்கள்.
கோபமேபடாமல் அவர் களையும் விளையாடக் கூப்பிட்டு, குறைந்த நேரத்துக்குள் தோற்கடிப் பார். புன்னகை மாறாமல் கைகொடுத்து அனுப்பிவைப்பார். அதுதான் சாய்னா!