விஜய் மல்லையாவின் சொகுசு விமானத்தின் அடிப்படை விலையை குறைத்து, மீண்டும் ஏலம் விட சேவை வரித்துறை முயற்சி மேற்கொள்கிறது. மதுபான தயாரிப்பு தொழிலில் கொடிகட்டிப் பறந்த விஜய் மல்லையா
கிங் பிஷர் ஏர்லைன்ஸ் எனும் விமான சேவையை தொடங்கினார். அத்துடன் தனி விமானத்தையும் அவர் பயன்படுத்தி வந்தார். கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நிதி நெருக்கடிக்குள்ளானது.
ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 2012ஆம் ஆண்டு இதன் விமான சேவை நிறுத்தப்பட்டு உரிமமும் ரத்தானது.
இந்நிலையில், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், சேவை வரித்துறைக்கு ரூ.800 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளதால், அவரது தனிப்பட்ட சொகுசு விமானத்தை கடந்த 2013-ம் ஆண்டு சேவை வரித்துறையினர் கைப்பற்றினர்.
பின்னர் அதை ஏலத்தில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து கடனை பைசல் செய்ய முடிவு செய்தது. அதன்படி கடந்த 30-ந் தேதி நடந்த ஏலத்தின்போது, ரூ.152 கோடி அடிப்படை விலையாக வைத்து ஏலம் விடப்பட்டது.
ஆனால் அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் போய் விட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஆல்னா ஏரோ டிஸ்ட்ரிபியூசனல் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ.1.09 கோடிக்கு ஏலம் கேட்ட பின்னர் யாரும் கேட்காததால் ஏலம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அந்த விமானத்தை ஏலத்துக்கு கொண்டு வருவதற்கு சேவை வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக மும்பை உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 21-ந் தேதி ஏலம் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறை கூடுதலான நபர்களை ஏலம் கேட்க வைக்கும் முயற்சியாக, விமானத்தின் அடிப்படை விலையை ரூ.152 கோடியில் இருந்து குறைப்பது குறித்து சேவை வரித்துறை பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
இருப்பினும் இதில் இறுதி முடிவை இந்த துறையின் கூட்டு விலை நிர்ணய குழுதான் எடுக்கும் என்றும் 10 நாட்களுக்குள் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை விமான நிலையத்தில் கடந்த சில வருடங்களாக மல்லையாவின் சொகுசு விமானம் பயன்படுத்தப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.