ஒன்பதாவது நாளில் பிடிபட்ட கொலையாளி !

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் ஈமச்சடங்குகள் ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் 
இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவாதி கொலை செய்யப்பட்ட 9வது நாளான இன்று தான் குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்டிருப்பது சுவாதியின் ஆத்மா சாந்தி அடைந்திருப்பதாக உறவினர்கள் மத்தியில் பேசப்படுகிறது. 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ம்தேதி சூளைமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சுவாதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ராம்குமார் என்பவரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். 

சுவாதியின் உடல் சென்னையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டாலும், அவரது ஈமச்சடங்குகளை திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடத்த சுவாதியின் பெற்றோர்களும், உறவினர்களும் முடிவெடுத்தனர். 

இதையடுத்து சுவாதியின் பெற்றோர் சென்னையில் இருந்து ஸ்ரீரங்கத்தில் வடக்கு அடையவளஞ்சான் வீதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று வந்தனர். 

சுவாதியின் ஈமச்சடங்குகள் ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. சுவாதியின் தாயாரான ரங்கநாயகியின் சொந்த ஊர் திருச்சி ஸ்ரீரங்கம். 

சுவாதியின் தாத்தா சிங்கமய்யங்கார் ஸ்ரீரங்கத்தில் பக்தர்களை திவ்ய தேச சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும் டூரிஸ்ட் டிராவல்ஸ் கைடாகவும், கோவில் வளாகத்தில் புத்தக கடையும் நடத்தி வந்துள்ளார். 

சுவாதியின் இரண்டு தாய்மாமன்களும், ஒரு சித்தியும் ஸ்ரீரங்கத்தில் உள்ளனர். தாய்மாமா ஒருவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் புத்தக கடை நடத்தி வருகிறார். மற்றொருவர் ஸ்டே‌ஷனரி கடை நடத்தி வருகிறார். 

பள்ளி விடுமுறை காலங்களில் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட ரங்கநாதர் கோவில் விழாக்கள் மற்றும் உறவினர் இல்ல விழாக்களில் சுவாதியின் தாய் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்ள தவறியதில்லை. 

அந்த வகையில் சுவாதி ஸ்ரீரங்கத்திற்கு அடிக்கடி வந்து சென்று உள்ளார். இன்றுடன் சுவாதி கொலை செய்யப்பட்டு 9 நாள் ஆகிறது.

கொள்ளிடம் கரை விஷ்ணு பாதத்தில் சுவாதிக்கு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் 9 வது நாள் காரியம் செய்து தானம் வழங்கினர். ஞாயிறன்று 10வது நாள் கருமாதி சடங்கில் சுவாதியின் உருவம் போல் செய்யப்பட்டு உப்பில்லாத உணவு படைக்கப்படும். 

சுவாதியின் தாத்தா சிங்கம் ஐயங்கார் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியின் மறுதினமான துவாதேசி அன்று ஏராளமானோருக்கு சொந்த செலவில் அன்னதானம் அளிப்பாராம். 
கடந்த 2 மாதத்திற்கு முன்பு தான் சுவாதி விடுமுறையின் போது ஸ்ரீரங்கம் வந்து சென்றுள்ளார். சுவாதிக்கு இன்று ஈம சடங்கு செய்யும் சோகம் ஏற்பட்டு விட்டதே என்று உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

சுவாதி கொலை செய்யப்பட்ட 9வது நாளான இன்று தான் குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்டிருப்பது சுவாதியின் ஆத்மா சாந்தி அடைந்திருப்பதாகவும் உறவினர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings