ஓட்டுநரை கட்டிப் போட்டு ரூ.16 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரி ராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாரதி.
இவர் கார்களை வாடகைக்கு விடுவது மற்றும் திருப்பதியில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.
ரூ.16 லட்சம் மதிப்புள்ள கார்
இவர் அண்மையில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்நிலையில், நேற்றுமுன் தினம் பாரதியின் உறவினர்கள் சிலர் இக்காரில் திருப்பதியில் இருந்து சென்னை அம்பத்தூருக்கு வந்தனர்.
காரை வினோத் என்பவர் ஓட்டி வந்தார். பாரதியின் உறவினர்களை அம்பத்தூரில் இறக்கி விட்டு வினோத் காரை காவேரி ராஜபுரத்துக்கு ஓட்டிச் சென்றார்.
மர்ம கும்பல் தாக்குதல்
அப்போது வழியில் திருவள் ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது பின்னால் 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் காரை வழிமறித்து நிறுத்தியது.
பின்னர் வினோத்தை தாக்கி அவரை கட்டிப் போட்டு காருடன் அவரை கடத்திச் சென்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்றதும் ஓட்டுநர் வினோத்தை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு மர்ம கும்பல் காரை கடத்திச் சென்றது.
இது குறித்து, கே.கே.சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து காரை கடத்திச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.