பெண்களுடன் செல்ஃபி... மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி விலகல் !

ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடன் விசாரணைக்கு சென்ற அம்மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சோம்யா குர்ஜார் செல்ஃபி எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்த அவர் தன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தான் தவறு ஏதும் செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் அனுமதி கேட்ட பிறகே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் குர்ஜார் எடுத்த செல்ஃபி வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது அதில் ராஜஸ்தான் மகளிர் ஆணையத் தலைவர் சுமன் சர்மா கேமராவுக்கு போஸ் கொடுப்பது போலவே தெரிவதாக விமர்சனங்கள் எழுந்தன.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராஜஸ்தான் மகளிர் ஆணையத் தலைவர் சுமன் சர்மா, வியாழக்கிழமை கூறும்போது, "பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நான் பேசிக் கொண்டிருக்கும்போது சோம்யா குர்ஜார் அந்த செல்ஃபி புகைப்படத்தை எடுத்துள்ளார். 

அது மாதிரியான விஷயங்களை நான் ஊக்குவிப்பதில்லை. சோம்யாவிடம் விளக்கம் கேட்டிருக்கிறேன். நாளைக்குள் அவர் தனது விளக்கத்தை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பை சோம்யா குர்ஜார் துறந்துள்ளார்.

ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் வரதட்சணை தராததால் 30 வயது பெண் ஒருவரை அவரது கணவரும், கணவரின் சகோதரர்களும் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். அத்துடன் அப்பெண்ணின் நெற்றியிலும் கையிலும் 'வரதட்சணை தராததவர்' என பச்சை குத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் மற்றும் சகோதரர்கள் மீது சட்டப் பிரிவுகள் 498-ஏ, 376, 406 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings