தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு திறமையான கட்சியை வலுப்படுத்தும் திறன் உள்ள நபரை தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமிக்கும் என அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்த பின்னர் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், சோனியா காந்தியை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்ததாக கூறிய
அவர் யாருக்காகவும் சோனியா காந்தியிடம் பரிந்து பேசவில்லை என்றார். செய்தி தொடர்பாளர் என்ற கோணத்தில் இருந்து பார்க்கும் போது இளங்கோவன் தலைவராக இருந்த போது
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்புடன் இயங்கியது என்று கூறிய குஷ்பு, கடந்த தேர்தலில் கட்சியின் வாக்கு சதவீதமும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
தான் எப்போதுமே ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆதரவாளர்தான் என்று கூறிய குஷ்பு, ஈவிகேஎஸ் இளங்கோவனை மீண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க கோரி வலியுறுத்தவில்லை என்றும் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு திறமையான கட்சியை வலுப்படுத்தும் திறன் உள்ள நபரை தலைவராக காங்கிரஸ் மேலிடம் நியமிக்கும் என்றார்.
இணையம் துறைமுகத்திற்கு உள்ளூர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து வருவது பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர் இது குறித்து காங்கிரஸ் தலைமை உரிய விளக்கம் அளிக்கும் என்றும் குஷ்பு கூறினார்.