நாட்டுக்காக ஒரு மகன் போராடிக் கொண்டிருக்கையில், அதே வயிற்றில் பிறந்த இன்னொரு உயிர் தீவிரவாதக்குழுவில் இணைந்தால் எந்த தாயால் தாங்கிக் கொள்ள முடியும்? கேரளாவில் அப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது.
திருவனந்தபுரைத்தை சேர்ந்தவர் பிந்து. இவரது கணவர் குமார். சிறிய உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். மகன், மகள் என இரு குழந்தைகள் கொண்ட அளவான குடும்பம். குதூகலமாக வாழ்க்கை போய்க் கொண்டிந்தது.
மகனுக்கு ராணுவத்தில் சேர ஆசை. மகளுக்கு மருத்துவராக வேண்டு மென்பது கனவு. மகன் ராணுவத்தில் சேர்ந்து தற்போது என்.எஸ்.ஜி கமாண்டோவாக இருக்கிறார்.
டாக்டர் கனவுடன் மகள் நிமிஷா காசர்கோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வந்தார். கடந்த மே மாதம் 16ம் தேதி கடைசியாக நிமிஷா, வீட்டுக்கு வந்து பெற்றோரை பார்த்துள்ளார்.
அதற்கு பிறகு ஜுன் 3ம் தேதி 'மாம் ஸ்வீட் டாட்டர் உறங்க போயிட்டேனு ' என ஒரு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். அதற்கு பிறகு அவரிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை. அடுத்த நாள் பிந்து, நிமிஷாவுக்கு போன் செய்துள்ளார்.
ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்து. தொடர்ந்து நிமிஷாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால், அவரைத் தேடி பிந்து, காசர்கோட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது நிமிஷா, இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதாக கூறி பிந்துவை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். தனது கணவர் பெயர் ஈஷா என்றும், தனது பெயரை பாத்திமா என்று மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிச்சியடைந்தாலும் பெற்றோர் நிமிஷாவை ஏற்றுக் கொண்டனர் .ஆனால் கடந்த நவம்பர் மாதம் முதலே நிமிஷாவின் நடவடிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் கேரளத்தில் சேர்ந்த 20 பேர் ஐஎஸ்ஐஎஸ் குழுவில் இணைந்துள்ளதாக தகவல் பரவியது. அதில் நிமிஷாவும் ஒருவர் என்பது இப்போது தாய் பிந்துவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, தனது மகளை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு பிந்து கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல் அமைச்சரின் சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பிந்து, ''அடுத்த மாதம் எனது மகளுக்கு 24 வது பிறந்த நாள்.
இப்போது ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக தகவல் வருகிறது. அழுது அழுது எனக்கு கண்ணீரே வற்றி விட்டது. பிராத்தனை செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
எனது மகளை கண்டுபிடிக்க கடவுள் உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனது இரு குழந்தைகளும் தேசப்பற்று கொண்டவர்கள். மூத்தவனுக்கு ராணுவத்தில் சேர ஆசை.
அதன்படியே ராணுவத்தில் சேர்ந்தும் விட்டான். இவளுக்கு டாக்டராக வேண்டுமென்பது கனவு. குழந்தைகளின் விருப்பத்திற்கு எப்போதுமே நான் குறுக்கே நின்றதே இல்லை.
ஆனால் இப்போது இப்படியாகி விட்டதே. இந்த விஷயத்தை எனது மகன் கேள்விபட்டால் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறானோ'' எனக் கதறினார். கேரளாவே இப்போது அதிர்ந்து கிடக்கிறது!