நம் உருவத்துக்கும் உயரத்துக்கும் ஏற்ற மாதிரியான வண்டி வாங்குவதில்தான் பாதுகாப்பு ஆரம்பிக்கிறது. ஒருவரின் உயரத்துக்கு சம்பந்தம் இல்லாத உயரமான வண்டியைத் தேர்ந்தெடுத்தால்,
சட்டென பிரேக் பிடிக்கும்போது, கால்களைக் கீழே ஊன்றி வண்டியை பேலன்ஸ் செய்து நிறுத்த முடியாது.
ஆகையால், உயரத்துக்கு ஏற்ற வண்டிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். வண்டி ஓட்டும்போது கவனம் செலுத்த வேண்டிய இரண்டாவது விஷயம்...
உடை மற்றும் காலணிகள். பெண்களைப் பொறுத்த அளவில், ஜீன்ஸ், ஓவர்கோட் தான் வண்டி ஓட்ட சௌகர்யமான உடை. சுடிதார் சௌகர்யமாக இருந்தாலும் துப்பட்டா பெரும் பிரச்சனை.
அதுவும் கழுத்தைச் சுற்றிக் கொண்டு, காற்றில் பறக்க விட்டபடி வண்டி ஓட்டுவது ரொம்பவே ஆபத்தானது. துப்பட்டாவைப் பின் பக்கமாக நன்றாகக் கட்டி நல்ல பாதுகாப்புடன் வண்டியை ஓட்டலாம்.
கல்லூரிப் பெண்கள் ஆர்வத்துடன் புடவை அணிந்து ஓட்டும் போது, முந்தானையை இழுத்துச் செருகிக் கொண்டு ஓட்ட வேண்டும்.
சக்கரங்களில் சேலையோ, துப்பட்டாவோ சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், கவனம் அவசியம். பின்னால் ஒருவரை ஏற்றிச் செல்லும் போது,
பேசிக்கொண்டே ஓட்டக் கூடாது. காலணிகளைப் பொறுத்த அளவில், ஷூ போடா விட்டாலும் குறைந்த பட்சம் கால்களை இழுத்துப் பிடிக்கக் கூடிய பட்டைச் செருப்புகளை அணிந்து ஓட்டுவது நல்லது.
அடுத்து, வண்டியை எடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள். ஸ்டாண்ட் முழுமையாக எடுத்து விடப்பட்டு இருக்கிறதா, பிரேக், லைட் சரியாக இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
ஓட்டும் போது கவனம் முழுமையாக சாலையில் இருக்க வேண்டும். வீட்டிலோ, அலுவலகத்திலோ கவனம் இருந்தால் ஆபத்து.
செல்பேசியைப் பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவது இன்னும் ஆபத்து. பெரும்பாலான விபத்துகள் சாலை வளைவுகளிலேயே ஏற்படுகின்றன.
எனவே, வளைவுகளில் செல்லும்போது நிதானம் தேவை. வேகம் 40 கி.மீ-ஐ தாண்டக் கூடாது என்பதைத் தாரக மந்திரமாகவே வைத்துக் கொள்ளலாம். அவசரக் காலகட்டங்களில் எல்லோரும் செய்யும் பெரிய தவறு...
ஆக்ஸிலேட்டரை அதிகப்படுத்திக் கொண்டே பிரேக்கை அழுத்துவது. வண்டியைக் கீழே சாய்த்து இழுத்து விபத்தை உருவாக்குவது இது தான். இதைத் தவிர்க்க வேண்டும்.
இரவு நேரங்களில் எதிர்த் திசை வாகனங்களில் இருந்து வெளியாகும் முகப்பு வெளிச்சங்கள் கண்களைச் கூசச் செய்யும்.
அப்போது எதிரில் வரும் வாகனத்தின் ஹெட்லைட்டுகளைப் பார்க்காமல் சாலையில் விழும் நமது வாகனத்தின் வெளிச்சத்தைப் பார்த்து மிகவும் நிதானமாக ஓட்ட வேண்டும்.
அவசரத் தேவைக்கு ஒரு முதல் உதவிப் பெட்டியை வண்டியில் வைத்திருப்பது நல்லது. தங்களுடைய முகவரி, இரத்த வகை இவற்றைப் பற்றிய விவரங்களைக் கழுத்தில் தொங்கும்
அடையாள அட்டையிலோ அல்லது வண்டியிலோ வைத்திருப்பது அவசர நேரங்களில் உதவும். சுருக்கமாக ஒரு வரியில் சொன்னால் நிதானமே விவேகம்!