முட்டாள்தன செல்ஃபி வேண்டாம்... குரேஷியா !

முட்டாள்தனமான, அபாயகரமான செல்ஃபிகளை எடுக்க வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது குரேஷியா சுற்றுலாத் துறை.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் நாடு குரேஷியா. அதுவும் குரேஷியாவின் மலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்கின்றனர்.

அவ்வாறு செல்பவர்கள் மலை உச்சி, குன்று போன்ற சவாலான இடங்களில் நின்றுகொண்டு ஃபோட்டோ, செல்ஃபி எடுக்கின்றனர். அவ்வாறாக புகைப்படம் எடுக்கும்போது தவறி விழுந்து இறப்பவர்கள், காயமடைவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டு சுற்றுலாத் துறை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. "அன்பான சுற்றுலா பயணிகளே நாங்கள் உங்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறோம். 

அதே போன்று நீங்களும் உங்கள் மீது மரியாதை கொள்ள வேண்டிய நேரம் இது. ஆபத்தான, முட்டாள்தனமான முறையில் செல்ஃபி எடுப்பதை தவிருங்கள்" என்று பதிவிட்டுள்ளனர்.

குரேஷியா நாட்டின் மீட்பு பணி அதிகாரிகள், தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கவனிக்க வைத்த விபத்துகள்:

குரேஷிய அரசு திடீரென இத்தகைய அறிவிப்புகளை வெளியிட அண்மையில் நடந்த சில செல்ஃபி, புகைப்படம் சார்ந்த விபத்துக்களே காரணம்.

தேசிய பூங்காவில் அமைந்துள்ள பிலிட்வைஸ் ஏரிக்கரைக்கு மேலே 75 மீட்டர் உயரத்தில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும் போது இளைஞர் ஒருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

மரக்கிளையில் சிக்கி, அதிஷ்டவசமாக உயிர்தப்பிய அந்த இளைஞர் பலமான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று கடந்த வருடமும் 54 வயதான ஒருவர் இதே தேசிய பூங்காவில் செல்ஃபி எடுத்து கொண்டிருக்கும் போது தடுமாறி பாறையில் விழுந்து உயிரிழந்தார்.

சுற்றுலா பொருளாதாரம்:

குரோஷியாவில் ஆண்டிற்கு 14 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். குரோஷியாவில் பொருளாதார ரீதியாக சுற்றுலாத்துறையின் மூலம் மட்டுமே ஆண்டிற்கு 4 மில்லியன் வரை வருமானம் ஈட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings