ஓட்டுத் துணியுடன் ஒரு பெண் குளிக்கும் காட்சி... கணவனுக்குத் தெரியாமல் வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறீர்களா...? என்ற கேள்வி இப்படியிருக்கிறது டிவி நிகழ்ச்சிகள்.
(டார்கெட் ரேட்டிங் பாய்ண்ட் அல்லது டெலிவிஷன் ரேட்டிங் பாய்ண்ட்)
ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை என்பதும், அது அந்தரங்கமான குடும்ப எல்லைக்குள் இது நாள் வரை அடங்கியிருந்ததும் பொதுத் தளத்திற்கு கொண்டு வந்து காசு பார்க்கும் விஷயங்களாகி யிருக்கிறது. ஏன்..?
சோனி டிவியில் வரும் "இஸ் ஜங்கிள் சே முஜே பசாவோ', என்.டி.டி.டிவி இமேஜினில் வந்த "ராக்கி சாவந்தின் சுயம்வரம்', ஸ்டார் சேனலில் வரும் "சச் கா சாம்னா' போன்ற
ரியாலிட்டி ஷோக்களை சற்று காலம் முன்பு வரை இந்தியாவில் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது. பாட்டுப் போட்டிகள், நடனப் போட்டிகள் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் தொடங்கி,
அடுத்து அந்தரங்க மனித உறவுகளை வெளிச்சம் போட்டுக்காட்டி, அந்தக் கிளுகிளுப்பை பயன்படுத்தி டிவி சேனல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்குகளை உயர்த்துகிறார்கள்.
ராக்கி சாவந்த் யாரை மணமகனாக ஏற்கப் போகிறார் என்பது தினசரி சீரியல் சஸ்பென்ûஸவிட வித்தியாசமானதாக இருக்கிறது. இதை லட்சக்கணக்கானோர் மெய் மறந்து பார்க்கிறார்கள்.
ஏனென்றால் சீரியல்களில் வருவது கற்பனைத் திருமணம், இது நிஜ திருமணம் என்று பார்வையாளர்கள் நம்புகிறார்கள். அல்லது நம்பும்படி அதை நகர்த்திச் செல்கிறார்கள்.
ஒரு காட்டில் ஆண்களையும் பெண்களையும் தனியாக விட்டுவிட்டு அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும், குளியல் உள்பட, கேமரா பதிவு செய்கிறது. சாவித் துவாரத்தின் வழியாக அடுத்தவர் வீட்டில், படுக்கையறையில்,
குளியல் அறையில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் உணர்வைத்தான் இது போன்ற பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் ஏற்படுத்துகின்றன. சரி ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் வருகின்றன.
எல்லாம் டி.ஆர்.பியின் மாயம். அதன் மூலம் பெறப்படும் விளம்பரத்தொகை. அதுவும் கொஞ்சம் நஞ்சமல்ல கோடி கோடியாய் பணம். இது பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
இந்தியாவில் தற்போதைய டிஆர்பியில் உள்ள சேனல்கள் 163. இந்தச் சேனல்கள் சந்தாவாக ஆண்டுக்கு 11,600கோடி ரூபாயைப் பெறுகிறது.
ஆனால் 21,300 கோடி ரூபாயை விளம்பரம் மூலம் பெறுகிறது. விளம்பரம் அதிகம் வந்தால் தான் நிகழ்ச்சியைத் தரமாக நடத்தமுடியும் என்பது சேனல்களின் கொள்கையாக இருக்கிறது.
அதனால் விளம்பரத்தைப் பெற ஒவ்வொரு சேனலும் எவ்வளவு தரம் தாழ முடியுமோ அந்த அளவுக்குப் போகின்றன என்பது தான் வருத்தமான விஷயம்.
தொலைக்காட்சியில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் டி.ஆர்.பி ரேட்டிங் என்று ஒன்று இருக்கிறது.
அதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அந்த விளம்பரத்தின் புகழ்தான் டிஆர்பி. இதன் விரிவாக்கம் "இலக்கு அளவீட்டு புள்ளி' (டார்கெட் ரேட்டிங் பாய்ண்ட் அல்லது டெலிவிஷன் ரேட்டிங் பாய்ண்ட்) என்பதாகும்.
பார்வையாளர்கள் பங்கெடுக்கும் அளவை வைத்து ஒரு குறிப்பிட்ட சேனல், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மதிப்பீடுகள் செய்கிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டது இந்தப் புள்ளி விவரம். இந்த டி.ஆர்.பி முடிவுகள் விளம்பரதார்களை அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குத் தக்க வைக்க உதவுகிறது.
ஒரு நிகழ்ச்சிக்கு அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து இந்த டி.ஆர்.பி ஏறவோ, இறங்கவோ செய்யும். மக்களில் சிலர் எந்த சேனலை அதிகம் விரும்பிப் பார்க்கிறார்கள் என்று கணக்கெடுக்கும் முறை இது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீடுகளில் ஒரு ஜி.ஆர்.பி மீட்டரை (செட்டாப் பாக்ஸ்) பொருத்தி, அந்த வீட்டுக்காரர்கள், எந்த சேனல் எப்பெப்போது எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள் என்று கணக்கெடுத்து,
குத்து மதிப்பாக, "இந்த டி.விதான், 7.30மணிக்கு பாப்புலர்', "இந்த டிவியில்தான் நிகழ்ச்சிகள் அதிகம் பார்க்கப்படுகிறது' அப்படி இப்படி என்று சொல்லும் ஒரு போக்குதான் டி.ஆர்.பி ரேட்டிங்.
ஒரு நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரேட்டிங் இருக்குதோ, அதன் அடிப்படையில் தான், விளம்பரதாரர்கள் அந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு தொகையை கொடுத்து எந்தெந்த நேரத்தில் விளம்பரம் போடலாம் என்று முடிவு செய்வார்கள்.
இந்த ரேட்டிங் முறையில் பல விஷயம் குழப்பம் தான். எவ்வளவு பேர் வீட்டில் மீட்டர் போடுவார்கள்? ரேட்டிங் முடிவுகள் எல்லாம் நேர்மையான முறையில் தான் நடக்கிறதா? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் இல்லை.
சில சானல்கள், மற்ற சானல்களை விட சிறந்தது என்று தாங்களாகவே கூவிக்கூவி நிகழ்ச்சிகளை விற்பார்கள்.
இதை யெல்லாம் பார்க்கும் போது நமக்குக் குழப்பமாக இருக்கும். அப்படி யென்றால் யார் தானய்யா முந்தி..? யார் தானய்யா பிந்தி..?
இப்படித் தான் ஏகப்பட்ட எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 27.2.2012 அன்று விஜய் டிவியில் தொடங்கப்பட்ட "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி வெகு சீக்கிரத்திலேயே முடிவடைகிறது.
இதற்கு ஒரே காரணம் டி.ஆர்.பி. ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான கேள்விகளால் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும்,
அதனால் டி.ஆர்.பி கிடைத்திருக்காது. ரேட்டிங் சரியத் தொடங்கியதும் நடிகர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் என நிகழ்ச்சியை ஒரு வழியாக ஓட்டி, முடித்து விட்டார்கள்.
நிகழ்ச்சியின் பெயர் ஒரு கோடி என்றாலும், இந்த நிகழ்ச்சியில் இதுவரை அதிக பட்சம் ரூ. 12,50,000 பரிசுத் தொகை கொடுக்கப் பட்டிருக்கிறது.
இரட்டையர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது. தற்போது விண்ணப்பித்தவர்கள் பங்கேற்கவுமில்லை. நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்து விட்டது.
விஜய் டிவியை நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி காப்பியடிக்கும் சன் டிவியும் தனது சீரியல் நாயகிகளையெல்லாம் வைத்து "சன் குடும்பம்' என்ற பெயரில்
"கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி' நிகழ்ச்சியை ஓட்டிக் கொண்டிருக்கிறது. இதுவும் கூடிய சீக்கிரத்தில் ரேட்டிங் சரியத் தொடங்கி மூடுவிழாவை நோக்கி செல்லும் என்கிறார்கள்.
அசட்டுத்தனமான சீரியல்கள், அரை ஆபாசமான திரைப்படங்கள் இவற்றையே ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து சற்று விலகி நடிகர் அமீர்கான் வழங்கும் "சத்யமேவ ஜெயதே',போன்ற
ரியாலிட்டி ஷோ எனப்படும் உண்மை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பத் தொடங்கியதற்கு இரு காரணங்கள் உண்டு.
ஒன்று, முதல் இரண்டுடன் பார்வையாளருக்கு அலுப்பு ஏற்பட்டது. இரண்டாவது புதிய நிகழ்ச்சிகள் ஏதாவது செய்ய வேண்டு மென்றால், சினிமாவைப் போலவே டி.வியிலும் கற்பனை வறட்சி அதிகம்.
வெளி நாட்டுப்படங்களின் இன்ஸ்பிரேஷனில் படம் எடுப்பது போலவே வெளி நாட்டு டி.வி நிகழ்ச்சிகளின் இன்ஸ்பிரேஷனில் தான் இங்கேயும் புது நிகழ்ச்சிகள் உருவாக்கப் படுகின்றன.
ரியாலிட்டி ஷோக்களும் அப்படி வந்தவை தான். உலக அளவில் ஓரளவு தரமும் பரபரப்பும் கலந்து வணிக வெற்றி பெற்ற ஷோ, ஓப்ரா வின்ஃபிரேவுடையது தான்.
வேறு பல ஷோக்கள் பிரபலமானாலும் அவை பெரும்பாலும் சென்சேஷனையே அடிப்படையாகக் கொண்டவை.
தமிழில் ஓரளவு ஓப்ரா ஷோவைப் பின்பற்றி அமைக்கப்பட்டு பிரபலமான முதல் ஷோ நடிகை லட்சுமியை வழங்க வைத்து மின்பிம்பங்கள் பால கைலாசம் உருவாக்கிய கதை அல்ல நிஜம் நிகழ்ச்சி.
பல சமூகப் பிரச்னைகளை அம்பலப் படுத்தலாம். சாதாரண மக்கள் படும் துயரங்களை வீட்டு அறைக்குள் வசதியாக டி.வி பார்ப்பவருக்கு உறைக்கச் செய்யலாம். மனித உறவுகளில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்து கொள்ளச் செய்ய உதவலாம்.
அதெல்லாம் ஆப்பிள் வெட்டுவது போல. இன்னொரு பக்கம், தனிப்பட்டவர்கள் தங்கள் பகைகளைப் பழி தீர்க்கும் இடமாக இது மாற்றப்பட முடியும்.
பரபரப்புக்காக பல வீண் அவதூறுகள் துளியும் தயக்கம் இல்லாமல் அள்ளி வீசப்படும்.
டி.ஆர்.பி ரேட்டிங் எனப்படும் பார்ப்போர் எண்ணிக்கை அளவுகோல் தான் அதிக விளம்பர வருவாய்க்கான உத்தரவாதம் என்பதால், அந்த ஒற்றை நோக்கம் மட்டுமே நிகழ்ச்சியின் தன்மையை மாற்றத் தொடங்கி விடும்.
அண்மைக் காலமாக பாட்டு, நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் தோற்ற குழந்தையை அழவிட்டு, அதன் உறவினர்களின் முகங்களைக் கலங்கச் செய்து அதைப் பதிவு செய்து ஒளிபரப்பி,
ஷோவை அழுகாச்சி சீரியல் மாதிரி ஆக்கி அந்த ஆடியன்சையும் சம்பாதிக்கப் பார்க்கும் கேவலமான வணிக உத்திகள் தொலைக்காட்சிகளில் சகஜமாகி விட்டன.
ரியாலிட்டி ஷோவில் வந்தால் குடும்பப் பிரச்னை தீர்க்கப்பட்டு விடும் என்ற பொய்யான நம்பிக்கையை அளிப்பதும் ஒரு வணிக உத்தியாக இந்த ஷோக்களில் பின்பற்றப்படுகிறது.
ஒரு சில பிரச்னைகள் மெய்யாகவே தீர்க்கப் படுகின்றன என்பது உண்மை தான்.
ஆனால் சில பிரச்னைகள் ஷோவுக்கு வந்ததாலேயே முற்றி தீராமலும் போயிருக்கும் தானே? அந்த விஷயத்தை எந்த டிவிதான் காட்டியிருக்கிறது?
இப்போது இந்த ஷோக்களுக்கு பலர் தாமாகவே தங்கள் பிரச்சினைகளுடன் முன் வருவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், சுவையான பிரச்னை உடையவர்களைத் தேடிப் பிடித்துக் கொண்டு வர
தயாரிப்புக் குழுவில் இருக்கும் நிருபர்கள் படும் பாடு இருக்கிறதே... அப்பாடா அது சினிமாவில் நல்ல சீன் சொல்ல உதவி இயக்குநர்கள் படும் பாட்டுக்கு நிகரானது.
மக்களுக்காக தொலைக்காட்சிகள் மெனக்கெடுவதை விட டி.ஆர்.பிக்காகத்தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது.
இந்த சூழலில் டி.ஆர்.பி என்றால் என்ன? அதிலுள்ள சாதக பாதகங்கள் என்னென்ன என்பதை அது சம்பந்தப் பட்டவர்களிடம் கேட்ட போது...
தனஞ்செயன் வெளியிடல் - சினிமா, தொலைக்காட்சி - யுடிவி மோஷன்
""இந்தியாவில் தற்போது "இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்கள் அளவை நிறுவனம்' (intam) தான் தொலைக்காட்சி
ரேட்டிங் பாயிண்டை கணக்கீடு செய்கிறது. இது இணைய மின்னணு நிறுவனமாகும். இது இரண்டு முறைகளில் பயன்படுகிறது.
1. அதிர்வெண் கண்காணிப்பு. 2. படம் மேப்பிங் முறை.
இதில் இரண்டாவது டிஆர்பியின் நம்பகமான முறை. இதைத்தான் தற்போது பயன்படுத்துகிறோம். 2001ல் இருந்து இந்தியாவில் இது நடைமுறையில் இருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங் என்பது "செலக்டியூ சேம்பல் அவர்ஸ்' என்று பொருள்படும். இதை எப்படி அவர்கள் எடுக்கிறார்கள் என்றால், டிவி ரிமோட்டை ஆன் செய்யும் போதே
செட்டாப் பாக்ஸும் இயங்குவது போல அமைக்கப்பட்டிருக்கும். இந்தியா முழுக்க 40,000 ஆயிரம் செட்டாப் பாக்ஸ் இருக்கும்.
தமிழ்நாடு முழுக்க 2400 செட்டாப் பாக்ஸ் பொருத்தப் பட்டிருக்கும். இது ஒரு குறிப்பட்ட வீடுகளில் அதாவது, இந்தியாவில் மக்களை லோயர் மிடில்கிளாஸ்,
அப்பர் மிடில்கிளாஸ், மிடில் கிளாஸ், புவர், ரிச் என்று பிரித்து வைத்து இந்த செட்டாப் பாக்ஸ் பொருத்தப்படும். பொருத்துவதற்கு அந்த வீட்டுக்காருக்கு பணமும் வழங்குவார்கள்.
அவர்களிடம் நீங்கள் பார்ப்பது போல பாருங்கள் என்று சொல்லுவார்கள். வீட்டுக்காரருக்கு ஒன்றிரண்டு மாதம் பாக்ஸ் பற்றி நினைவிருந்தாலும் பிறகு சகஜமாகி விடுவார்.
சில சேனல்கள் எங்களுக்கு டிஆர்பி வரவில்லை என்று சொல்லுவார்கள். அவர்கள் வழங்கும் நிகழ்ச்சியைப் பார்த்து 10 பேர் போன் செய்திருப்பார்கள்.
அதில் 8 பேர் அவர்களுடைய பிரண்டாக இருப்பார்கள். அதை வைத்தெல்லாம் டிஆர்பி முடிவாகாது.
ஒரு டிஆர்பி என்பது சேனலை கிராஸ் செய்து விட்டுப் போவதினால் மட்டும் வந்து விடாது. ஒரு நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்தால் மட்டுமே புள்ளி விழும்.
அதுமட்டுமல்ல, டிஆர்பி என்ற அமைப்பு ஒரு ஜென்ரல் பாடி. அது எந்த சேனலுக்கும் எதிரியோ நண்பனோ அல்ல. அவர்களுக்கு எந்தப் புள்ளி விவரம் வருகிறதோ அதைத்தான் வெளியிடுவார்கள்.
டிஆர்பியை வைத்துதான் எந்தெந்த டிவிக்கு அல்லது எந்தெந்த நிகழ்ச்சிக்கு என்று ரேட் பிக்ஸ் பண்ணமுடியும். டிஆர்பியில் ஒரு நிகழ்ச்சி புள்ளியைப் பெறவில்லை
என்றால் அந்த நிகழ்ச்சியை நிறுத்தியும் விடுவார்கள். ஏனென்றால் வருமானம் வராமல் நிகழ்ச்சியை எப்படி நடத்த முடியும்? எனவே ஒரு நிகழ்ச்சியை சரி பண்ணவும் டிஆர்பி உதவும்.''
அழகர் - இயக்குநர், "சரவணன் மீனாட்சி' தொடர் - விஜய் டிவி
""நாங்கள் டிஆர்பி பற்றியெல்லாம் யோசிக்கறதே இல்லை. என்னைப் பொறுத்த வரை ஆடியன்ஸ் தான் பக்கா டிஆர்பி. அவர்களுடைய ரேட்டிங்தான் முக்கியம்.
அவர்களுக்கு பிடிப்பது போல் ஒரு தொடரையோ அல்லது நிகழ்ச்சியையோ பண்ணி விட்டால் எதற்காக கவலைப்பட வேண்டும்?!
இன்றைய தேதி வரை டிஆர்பி என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. டிஆர்பி என்பது ஒரு புரியாத புதிர். அது வியாபாரத்துக்கான யுக்தி என்று நான் நினைக்கிறேன்.
ஒரு நிகழ்ச்சி ஓடினால் தானே அவர்களால் கூட புள்ளி போட முடியும்? அதனால் எனக்கு நிகழ்ச்சியின் தரம் தான் முக்கியம். தரத்தைத் தந்தால் ஆடியன்ஸ் பார்க்கப் போகிறார்கள். ரசிக்கப் போகிறார்கள்.
டிஆர்பியில் ரெக்கார்ட் செய்த தொடர் என்று "சரவணன் மீனாட்சி' தொடர் சொல்லப்பட்டது. அதே தொடரே 20 - 20 கிரிக்கெட் போட்டி நடந்தபோது, புள்ளி குறைந்தது என்றார்கள்.
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். டிஆர்பி என்பது அந்த அந்த நேரத்துக்கானது. நிரந்தரமானது அல்ல.
இது விளம்பரத்துக்கு ரேட்டிங் தர உதவும். ஒரு உண்மையான நிகழ்ச்சிக்கு ரேட்டிங் தருமா என்று சொல்ல முடியவில்லை.
டிஆர்பி பற்றி ஒரு இயக்குநராக நான் கவலைபட்டதில்லை. நாம் நமக்குப் பிடித்தை ரசிகர்களும் விரும்பும் படியாகத் தர வேண்டும். அது தான் நோக்கம்.
அந்த விதத்தில் எனக்கு சேனல் எந்த நெருக்கடியும் தரவில்லை. மற்ற சேனல் பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால் சேனல்கள் பார்வையாளரை நம்புவதைவிட விளம்பரத்தைத் தான் பெரிதாக நம்புகிறது. இது சில நேரம் ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது.''
ஜே.கே அபிநயா கிரியேஷன்ஸ் - தொடர் தயாரிப்பு நிறுவனம்
""டிஆர்பி என்பது ஒரு மோசடியான அமைப்புன்னு தான் நான் சொல்லுவேன். ஏனென்றால் அது நிகழ்ச்சியின் தரத்தை ஒரு போதும் கணக்கில் கொள்வதே இல்லை.
தமிழகத்தில் சுமார் இரண்டு கோடி பேர் வீட்டில் டிவி இருக்கிறது. இவர்கள் இரண்டாயிரம் பேரிடம் கணக்கெடுத்து முடித்து விடுவார்கள்.
அது தான் தமிழகத்தின் மொத்த கணக்கும். அதாவது "பல்ஸ் ஆப் தி ஆடியன்ஸ்' என்பதை வைத்துதான் முடிவெடுக்கிறார்கள். டிஆர்பி விஷயம் மாயமந்திரம் போன்றது தான்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தை ("சூப்பர் ஸ்லாட் டைம்') அதாவது இரவு 7 மணி முதல் 10 மணி வரை உள்ள நேரத்தை பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் தான் ஆக்கிரமித்திருக்கும்.
இது எல்லா சேனலிலும் இருக்கும். அந்த நேரத்தில்தான் ஆடியன்ஸ் நிறைய பார்ப்பார்கள்.
அப்போது டிஆர்பி எகிரும். இந்த நேரத்தில் ஒளிபரப்பப்படும் தரமில்லாத தொடரோ, நிகழ்ச்சியோ கூட டிஆர்பியில் வரும்.
ஆனால் மற்ற நேரங்களில் வரும் தரமான நிகழ்ச்சிகூட டிஆர்பியில் வராது. இது எப்படி என்றே தெரியவில்லை.
ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்துக்கும் டிஆர்பி இல்லை என்றால் இதயத் துடிப்பு எகிறும். ஒவ்வொரு நாளும் இங்கு இது தான் கதை.
சேனலில் ஒரு நேரத்தை வாங்கி, படாத பாடுபட்டு, பல லட்சங்கள் செலவு செய்து ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினால்,
அடுத்த இரண்டு வாரத்தில் "டிஆர்பி இல்லை.. நிகழ்ச்சியை நிறுத்துங்கள்' என்று சேனல் சொல்லும் போது அந்த தயாரிப்பு நிறுவனத்தின் நிலையை நினைத்துப் பாருங்கள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தையும், அந்த குறிப்பிட்ட நேரத்தை கைப்பற்றி வைத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தையும் தான் மீண்டும் மீண்டும் டிஆர்பி கணக்கில் எடுத்து புள்ளி வழங்கும்.
அந்த நிறுவனம் எந்த நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினாலும் டிஆர்பி இருக்கும். அப்படி யென்றால் மற்றவை நிகழ்ச்சி இல்லையா?
அதை ஆடியன்ஸ் பார்க்க வில்லையா? தங்களுக்கே விளம்பரம் வர வேண்டும் என்று அந்தக் குறிப்பிட்ட நிறுவனங்களே செய்யும் விஷயம் போலத்தான் டிஆர்பி இருக்கிறது.''
எச்.வசந்தகுமார் - சேர்மன், வசந்த் டி.வி
""டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தறதுக்காக சில விஷயங்களைச் செய்றதைவிட, நல்ல விஷயங்களை மக்கள் கிட்ட கொண்டு போறது தான் எங்க சேனலோட எண்ணம்.
என்னை மீறி எந்த ஒரு தவறான விஷயமும் மக்களுக்குப் போயிடக் கூடாதுங்கிற பொறுப்பு இருக்கறதால தான்,
என்னென்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகணும்னு முடிவெடுக்கிறதோட நிக்காம, அது எப்படி ஒளிபரப்பாகுதுன்னும் தினமும் கண்காணிக்கிறேன்.
எக்காரணம் கொண்டும் ஆபாசத்துக்கு வழி விட்டுடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கேன். எல்லாக் குழந்தைகளுக்கும், என் பேரப் பசங்கள அளவுகோலா வைச்சு தான், இதெல்லாம் நல்லது,
இது வேண்டாம்...னு நிகழ்ச்சிகளைத் தீர்மானிக்கிறேன். எங்க சேனல் எல்லோருக்கும் பிடிக்கிறது தான் முக்கியமே தவிர, ரேட்டிங் பத்தியெல்லாம் எனக்கு கவலையில்லை.''