பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் செல்பி... மகளிர் ஆணைய உறுப்பினர் !

ராஜஸ்தானில் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் அம்மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் செல்பி மோகம் தலைவிரித்து ஆடுகிறது. சந்தோஷ வீடானாலும் சரி, துக்க வீடானாலும் சரி மக்கள் செல்பி எடுத்துக் கொள்ளத் தவறுவதே இல்லை.

பல சமயங்களில் செல்பி உயிரைக் கொல்லும் காரணியாகவும் உள்ளது. ஆபத்துக்களை உணராமல் செல்பி எடுத்து உயிரை இழந்தவர்கள் ஏராளம்.
அந்தவகையில், பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் மகளிர் ஆணைய உறுப்பினர் ஒருவர் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மகளிர் ஆணைய உறுப்பினருக்கு ஆணைய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தன்று ஜெய்ப்பூர் வடக்குப் பகுதியில் உள்ள மகிளா காவல் நிலையத்திற்கு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது ராஜஸ்தான் மகளிர் ஆணைய தலைவர் சுமன் ஷர்மா மற்றும் உறுப்பினர் குர்ஜார் ஆகியோர் அப்பெண்ணை நேரில் சந்திக்க அங்கு சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சுமன் விசாரித்துக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த குர்ஜார் இந்த செல்பிக்களை எடுத்துள்ளார். அதுவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அருகில் சிரித்தபடி முகத்தை வைத்துக் கொண்டு அவர் செல்பி எடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த வேறு ஒருவர் புகைப்படமாக எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து விட்டார். வைரலாக இந்தப் புகைப்படங்கள் பரவியது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட குர்ஜாருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன.

அதனைத் தொடர்ந்து இந்த செல்பி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மகளிர் ஆணையத் தலைவர் சுமன் ஷர்மா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

"பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது ஆணைய உறுப்பினர் இந்த செல்பிக்களை எடுத்துள்ளார். அவர் செல்பி எடுக்கும் போது நான் கவனிக்கவில்லை.

இது போன்ற செயல்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு நான் அவரை கேட்டுக்கொண்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். வரதட்சணையாக 51 ஆயிரம் வழங்காததால் தனது கணவர் மற்றும் 

இரு சகோதரர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அத்துடன் அப்பெண்ணின் நெற்றியிலும் கையிலும் கணவர் குடும்பத்தார் 'வரதட்சணை தராததவர்' என பச்சை குத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர் மற்றும் சகோதரர்கள் மீது சட்டப் பிரிவுகள் 498-ஏ, 376, 406 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Privacy and cookie settings