ஐஎஸ்ஐஎஸ் என்னது என்றே எனக்கு தெரியாது, எனது கணவர் அந்த இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்த தகவல்களும் எனக்கு தெரியாது என்று முகமது மொசுருதீன் மனைவி
சாயிரா பானு திருப்பூர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் புர்துவான் ரயில் நிலையத்தில்
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய முகமது மொசுருதீன் (28) என்பவரை உளவுத்துறை போலீஸார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம், பிர்பாம் மாவட்டத்தை சேர்ந்த லாப்பூர் கிராமத்தை சேர்ந்த முகமது மொசுருதீன், கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூர் மங்கலம் ரோடு ஆண்டிப்பாளையம் கோழிப் பண்ணை பகுதியில்
குடும்பத்துடன் தங்கியிருந்து மளிகை கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநில உளவுத்துறை போலீஸார் மத்திய புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி கோவை புலனாய்வு பிரிவு போலீஸார், திருப்பூர் மத்திய போலீஸார் உதவியுடன் திருப்பூர் கோழிப்பண்ணையில் உள்ள முகமது மொசுருதீனின் மளிகை கடை மற்றும் அவரது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்து லேப்-டேப், கத்தி மற்றும் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர்.
வீட்டில் இருந்த முகமது மொசுருதீனின் மனைவி சாயிரா பானு (25), முகமது மொசுருதீனின் தம்பி அசுதுல்லா (23), நண்பர் ஷாநவாஸ் (20) ஆகியோரிடம் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புலனாய்வு பிரிவு போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அப்போது, முகமது மொசுருதீன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடனான தொடர்பு குறித்து சாயிராவிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் என்னது என்றே எனக்கு தெரியாது என்று சாயிரா கேட்டதோடு, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தோடு கணவர் வைத்திருந்த தொடர்பு குறித்தும் எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
மேலும் திருப்பூரை அடுத்த மங்கலத்தில் தங்கியிருந்த முகமது மொசுருதீனின் அண்ணன் முகமது லினாசுருதீனிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
தேவைப்படும் போது விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று முகமது மொசுருதீனின் குடும்பத்தினரிடம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திருப்பூர் வந்துள்ள மேற்கு வங்க மாநில உளவுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுஸ் தலைமையிலான போலீஸார்,
முகமது மொசுருதீன் நடத்தி வந்த மளிகை கடை மற்றும் அவர் குடியிருந்த வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தியதுடன் கைப்பற்றப்பட்ட லேப்-டேப்பையும்,
அவரது செல்போனையும் கண்காணித்தபோது, ஃபேஸ்புக் மூலமாக ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளது தெரியவந்ததோடு, செல்போனில் இருந்து சிரியாவுக்கும்,
மேற்கு வங்கத்தில் உள்ளவர்களுடனும் அடிக்கடி பேசி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், முகமது மொசுருதீன் திருப்பூரில் வசித்தபோது ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்தாரா,
அவர் யார், யாருடன் அதிகமாக தொடர்பு வைத்திருந்தார் உள்ளிட்ட விவரங்களை உளவுத்துறை போலீஸார் சேகரித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி உள்ளனர்.