நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்த மாணவர்கள் போலீஸில் ஒப்படைப்பு !

மாடியிலிருந்து நாயை தூக்கி எறிந்து கொடுமை செய்த மருத்துவ மாணவர்கள் இருவரையும் அவர்களது பெற்றோர்களே போலீஸில் ஒப்படைத்தனர்.
குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனை அம்பத்தூர் உதவி ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார். 

இருவரில் ஒருவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த கவுதம சுதர்சன் மற்றொருவர் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆஷிஷ் பால்.

உயரமான ஒரு கட்டிடத்தில் இருந்து நாய்க்குட்டியை ஈவு இரக்கமின்றி கீழே எறிந்து அது துன்பப்படுவதை பார்த்து ரசிக்கும் இளைஞர் ஒருவரின் வீடியோ, வாட்ஸ்அப்,

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த திங்கள்கிழமை வெளியானது. மாடியிலிருந்து தூக்கி எறியப்படும் நாய் வலி தாங்காமல் அலறும் காட்சியுடன் அந்த வீடியோ முடிகிறது.

சமூக வலைதளங்களில் வெளியான அந்த விடியோ குறித்து விலங்குகள் நல ஆர்வலர்களும், பொதுமக்களும் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். மேலும், வீடியோவை வெளியிட்டவர்களை கண்டுபிடிப்பதிலும் தீவிரம் காட்டினர்.

இதையடுத்து, அந்த வீடியோவில் இருப்பது குன்றத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் கவுதம் சுதர்சன் என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரின் பெயர் ஆஷிஷ் பால் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, விலங்குகள் நல ஆர்வலரான ஆண்டனி ரூபன் குன்றத்தூர் காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாணவர்கள் இருவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில் இன்று (புதன்கிழமை) மருத்துவ மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 

அவர்கள் இருவரையும் அவர்களது பெற்றோரே போலீஸில் ஒப்படைத்தனர். விலங்குகள் நல ஆர்வலரான ஆண்டனி ரூபன் பராமரப்பில் இருக்கும் பாதிக்கப்பட்ட நாய்க்குட்டி. உள்படம் | மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாய்க்குட்டி.| படங்கள்: ரூபனின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து.

இதுதொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆண்டனி ரூபன், ஸ்ரவன் கிருஷ்ணன் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறும்போது, "ஃபேஸ்புக்கில் வந்த வீடியோ வின் அடிப்படையில், 

அந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். போலீஸார் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 428, 429-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாயை கொடுமைப்படுத்தும் மருத்துவ மாணவர்கள் எப்படி மனிதர்களை மதித்து சிகிச்சை அளிப்பார்கள்? மனதளவில் அவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கும். 
எனவே, மருத்துவ மாணவர்களாக அவர்களை தொடர அனுமதிக்கக்கூடாது. மேலும், அந்த மாணவர்களை கைது செய்து, அவர்களுக்கு உரிய தண்டனை அளிக்க வேண்டும்" என்றனர்.

உயிருடன் மீட்பு:

நாயை தூக்கி எறிந்த வீடியோ வைரலாகிக் கொண்டிருந்த நிலையில் அந்த நாய் உயிருடன் இருப்பது தெரியவந்தது. நாய் போலீஸார் உதவியுடன் மீட்கப்பட்டது. அதற்கு தற்போது உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் ஜாமீன்:

மாடியில் இருந்து நாயை தூக்கி எறிந்ததால் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 

அவர்கள் ரூ.10,000 செலுத்தி ஜாமீன் பெற்றனர். நீதிபதி சந்தோஷ் இருவருக்கும் ஜாமீன் வழங்கினார்.
Tags:
Privacy and cookie settings