தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஒரு இடத்திலும் ஜெயிக்காது என்பது தமக்கு முன்னரே தெரியும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் வைகோ பேசியதாவது:
ம.தி.மு.க. சிறிய கட்சி தான். முல்லை பெரியாறு பிரச்சினை, மீத்தேன் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் சாதித்தது நமது கட்சிதான். மற்ற கட்சிகள் மக்கள் பிரச்சினைகளில் சாதித்தது இல்லை.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட இருந்ததை ம.தி.மு.க. தடுத்து நிறுத்தி அரசுடமையாக்கியது. நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பணம் பிரதானமாக விளங்கியது. பணம்தான் ஜனநாயகத்தை தோற்கடித்தது.
தேர்தலில் ஒரு இடம்கூட நாம் ஜெயிக்க முடியாது என்பது எனக்கு முன்பே தெரியும். மக்கள் நமது சேவையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். தேர்தலில் பணத்திற்கு அடிமை ஆகிறார்கள்.
தி.மு.க.வில் சுயமரியாதை இல்லை. அது குறைந்து வருகிறது. தி.மு.க. நம்மை அழிக்க நினைக்கிறது. இத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் நம்மை அழிக்க முயற்சித்து இருப்பார்கள்.
எனவே தி.மு.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்று ராஜதந்திர முடிவினை எடுத்தேன். இதனால் மாற்று அணி அமைந்தது. இவ்வாறு வைகோ கூறினார்.