'மணக்கோலத்தில் காண வேண்டிய மகளை மரண கோலத்தில் பார்க்க நேர்ந்து விட்டதே!' - நந்தினியின் தந்தை கண்ணீர்
சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவத்தின் போது உயிரிழந்த நந்தினியின் தந்தை வடிவேல் 'தி இந்து'விடம் கூறியதாவது:
"ரூ.20 ஆயிரம் பணத்துக்காக எனது மகளின் உயிர் பறிபோயுள்ளது. பெற்று, வளர்த்து, வீடு வாசலை விற்று படிக்க வைத்தேன். கொள்ளையன் ரூ.20 ஆயிரத்தை பறித்துச் சென்றி ருந்தாலும் பரவாயில்லை.
எனது மகளை வாகனத்திலிருந்து தள்ளி விட்டு சென்றுள்ளான். கொள்ளையனை பிடித்து அடித்திருக்கிறார்களே தவிர, எனது மகளை தூக்க யாரும் வரவில்லை. 108 ஆம்புலன்ஸை அழைத்து இருக்கிறார்கள்.
ஆனால், ஆம்புலன்ஸும் உரிய நேரத்தில் வரவில்லை. அதற்குள் அவள் உயிர் அநியாயமாக பறிபோய் விட்டது. பல நாள்களாக அந்தப் பகுதியில் போலீஸார் நின்று இருந்தனர். நேற்று இரவு ஏன் அங்கு நிற்கவில்லை?.
குடி போதையில் வந்த கொள்ளையனால் எனது மகள் உயிர் பறிபோயுள்ளது. எனவே, மதுக் கடைகள் அனைத்தையும் தயவுசெய்து மூடுங்கள்.
குடி யால் பறிபோன உயிர்களில் கடைசியாக எனது மகளின் உயிர் இருந்துவிட்டு போகட்டும். எனது மகள்தான் குடும் பத்தை காப்பாற்றி வந்தாள்.
"ஏடிஎம்-மிலிருந்து காலையில் பணத்தை எடுத்துக்கலாம்" என்று நான் சொன்னேன். அதற்கு எனது மகள், "பக்கத்துலதான ஏடிஎம் இருக்கு, போயிட்டு வந்துடு வேன்" என்று சொன்னாள். போன மகள் திரும்ப வரவில்லை.
எனது மகளுக்கு இந்த ஆண்டு திருமணமாக வேண்டும் என வேண்டி ஞாயிற்றுக்கிழமை தான் மாதாவுக்கு மாலை போட்டேன். மணக்கோலத்தில் காண வேண்டிய மகளை மரணக் கோலத்தில் பார்க்க நேர்ந்து விட்டது.
இனி எனது மகள் திரும்பக் கிடைக்கப் போவ தில்லை. எனது மகள் உயிரி ழக்க காரணமாக கொள்ளை யனை என்ன செய்யப் போகிறார்கள்?" என்றார் கண்ணீர் மல்க.
'கனவு இல்லத்தை கட்டி முடிப்பதற்குள் கண் மூடிய நந்தினி'
நந்தினியின் தாயார் செல்வி கூறும்போது, "மிக ஏழ்மையான நிலையிலேயே எங்கள் குடும்பம் இருந்தது. நான் வீட்டு வேலைக்கு செல்வேன். எனது கணவர் பெயின்டர் என்பதால் எல்லா நேரமும் வேலை இருக்காது.
எனது மகன் தற்போது வேலை செய்ய ஆரம்பித்துள்ளான். மிகுந்த சிரமத்துக்கிடையே நந்தினியை படிக்க வைத்தோம்.
அமைதியாகவும், அன்பானவராகவும் இருந்ததால் நந்தினியை எல்லோருக்கும் பிடிக்கும். சீனிவாசபுரத்தில் சிறு குடிசை வீட்டில் நாங்கள் வசித்து வந்தோம்.
எங்களை மாடி வீட்டில் உட்கார வைத்து அழகு பார்ப்பேன் என்று சிறுமியாக இருந்த போது நந்தினி அடிக்கடி கூறுவாள். அவள் சொன்னபடியே தனது சம்பளத்தின் மூலம், மாடி வீடு கட்டும் பணியை தொடங்கினாள்.
இப்போது 70 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. வீடு கட்ட வேண்டும் என்பதற்காக சராசரி பெண்களை போல ஆடை, ஆபரணம் என்று நாடாமல், தேவைகளை சுருக்கிக் கொண்டு வாழ்ந்தாள்.
ஆனால், முழுமையாக வீட்டை கட்டி முடிப்பதற்குள் இறந்து விட்டாள். அவள் தலையெடுத்த பின்னர் தான் எங்களின் தலையெழுத்து மாறியது'' என்று தெரிவித்தார்.
'மனிதாபிமானம் மிக்க ஆசிரியையை இழந்துவிட்டோம்' - பள்ளி முதல்வர் உருக்கம்
மனிதாபிமானம் மிக்க நல்ல ஆசிரியையை இழந்துவிட்டோம் என்று நந்தினி வேலைபார்த்த பள்ளியின் முதல்வர் உருக்கத்துடன் கூறினர்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) நள்ளிரவு நடந்த வழிப்பறி சம்பவத்தில் நீலாங்கரை வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியை நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்தால், அந்த பள்ளி நேற்று சோகத்தில் மூழ்கியது.
நந்தினியைப் பற்றி வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் வெங்கடாச்சலம் கூறியதாவது:
ஆசிரியை நந்தினி கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். நல்ல குடும்பப் பாங்கான பெண். இளம் வயது என்றாலும் குடும்பப் பொறுப்பு மிக்கவர்.
குடும்பத்துக்காகவே வாழ்ந்து வந்தார். ஆசிரியர் வேலையில் மிகுந்த பொறுப்பும் ஈடுபாடும் கொண்டவர். தினமும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வந்துவிடுவார்.
அவர் நல்ல ஆசிரியை. அதைவிட மேலாக மனிதாபிமானம் நிறைந்தவர். அவர் வகுப்பு எடுக்கும் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளை மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் கவனித்துக் கொள்வார். வகுப்புகள் முடிந்ததும் அந்தக் குழந்தைகளை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.
குழந்தைகள், சக ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் அனுசரித்து செல்லக் கூடியவர். மனிதாபிமான மிக்க நல்ல ஆசிரியை இழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.