ஐரோப்பிய கோப்பைக் கால்பந்து ஒரு கோலுக்கு பின் சோகம் !

ஐரோப்பிய கோப்பைக் கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ காயம் காரணமாக வெளியேறினார். 
பிரான்ஸ் வீரர் பேயட், ரொனால்டோவின் காலைத் தாக்க அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. முகத்தைப் பொத்திக் கொண்டு ரொனால்டோ களத்தைவிட்டு வெளியேற போர்ச்சுகலே அழத் தொடங்கியது. 

இனிமேல் எங்கே கோப்பைக் கிடைக்கப் போகிறது என லிஸ்பனில் அகன்ற திரையில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். 

இதற்கு முன் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த ஐரோப்பிய கோப்பைத் தொடரில் போர்ச்சுகல் அணியில் டீன்ஏஜ் ரொனால்டோ இடம் பெற்றிருந்தார். போர்ச்சுகலில்தான் இந்த தொடரும் நடந்தது.

சொந்த நாட்டில் நடந்த உற்சாகத்தில் இறுதி ஆட்டம் வரை முன்னேறிய போர்ச்சுகல், கிரீஸ் அணியிடம் ஒரு கோல் வாங்கி தோல்வி கண்டு கோப்பையை நழுவவிட்டது.

உண்மையில் கிரீஸ் அணியும் அதுவரை எந்தக் கோப்பையையும் வென்றது கிடையாது. அந்த அணிக்கும் அதுதான் முதல் கோப்பை. சொந்த மண்ணிலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை போர்ச்சுகல் அணி தவற விட்டது.

அப்போது யூரோவில் அதற்கு பிறகு இப்போதுதான் போர்ச்சுகல் அணி இறுதி ஆட்டம் வரை முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இருந்தது. 

இந்த ஆட்டத்தில் ரொனால்டோவும் காயம் காரணமாக வெளியேற, கோப்பை கைநழுவி விட்டது என்றே போர்ச்சுகல் ரசிகர்கள் கருதினர். ஆனால் பெப் தலைமையிலான தடுப்பாட்டம் போர்ச்சுகல் அணியைக் காப்பாற்றியது. 

இதனால் பிரான்ஸ் அணியின் ஜிரார்ட், கிரீஸ்மேன் ஆகியோரின் கோல் முயற்சிகள் எளிதாக முறியடிக்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்தது. கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. 

இதில் 109வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ஈடர், 25 அடி தொலைவில் இருந்து அடித்த பந்து பிரான்ஸ் கோல்கீப்பர் லோரீசின் வலப்புறமாக சரியாக கோல் கம்பத்தின் கார்னர் பகுதிக்குள் சென்று கோலானது. 

இந்த ஒரு கோல்தான் போர்ச்சுகல் அணியை முதன் முறையாக ஐரோப்பிய கோப்பையை வெல்ல வைத்துள்ளது. இந்த ஒரு கோலுக்கு பின்னால் எத்தனை சோகம் மறைந்திருக்கிறது தெரியுமா?

கால்பந்து உலகை பொறுத்தவரை, போர்ச்சுகல் சில உன்னத வீரர்களை உருவாக்கியிருக்கிறது. எஸ்பையோ, லூயீஸ் ஃபிகோ, ராய் கோஸ்ட்டா, டெக்கோ போன்றவர்கள் ரொனால்டோவுக்கு முன்னதாக போர்ச்சுகலின் நட்சத்திரங்கள்.

ஆனால் உலகக் கோப்பை, ஐரோப்பிய கோப்பைத் தொடர்களில் கோப்பையை வெல்லும் அளவுக்கு போர்ச்சுகல் அணி பலம் வாய்ந்ததாக இருக்காது.

அணியில் ஒரு நட்சத்திர வீரர் இருப்பார். அவரை நம்பி அணியும் விளையாடும். இந்த முறை கேப்டன் ரொனால்டோதான் அந்த நட்சத்திர வீரர்.

இதனால், முக்கியத் தொடர்களில் போர்ச்சுகல் அணி தொடர்ந்து தோற்றுக் கொண்டுதான் இருந்தது. குறிப்பாக பிரான்ஸ் அணியிடம் கடைசியாக 10 ஆட்டங்களில் தொடர்ச்சியாக போர்ச்சுகல் தோல்வி கண்டுள்ளது.

இதில் 1984, 2000 ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை அரையிறுதி ஆட்டங்களும் 2006 ஆம் ஆண்டு உலக் கோப்பை அரையிறுதி ஆட்டமும் கூட அடங்கும். 

தற்போது ஈடர் அடித்த இந்த ஒரே கோல் போர்ச்சுகலின் சர்வதேச கால்பந்தில் சந்தித்த அத்தனை காயத்தையும் ஆற்றும் வகையில் அமைந்து விட்டது. மைதானத்தை விட்டு, அழுதபடி வெளியேறிய ரொனால்டோகூட, இப்போது சிரித்துக் கொண்டிருக்கிறார்!
Tags:
Privacy and cookie settings