தந்தையுடன் சிறையில் இருந்த படியே படித்து ஐஐடி நுழைவுத் தேர்வில் வெற்றி !

ராஜஸ்தான் மாநிலத்தில், தாகியா என்ற கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஃபூல்சந்த். கடந்த 2007-ம் ஆண்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். 
நன்னடத்தை காரண மாக, இவர் கோடா நகரில் உள்ள திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

இவரின் மகன் பியூஷ், 12-ம் வகுப்பு முடித்த நிலையில், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) மகனை சேர்த்து படிக்க வைக்க விரும்பி னார். 

நுழைவுத் தேர்வு பயிற்சி, விடுதிக் கட்டணம் என அதிகமாக செலவாகும் என்பதால், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக, சிறைக்கு உள்ளேயே கூலி வேலை செய்து பணம் சேர்த்திருந்தார்.

இந்நிலையில், திறந்தவெளிச் சிறையில் கைதியுடன் அவரின் குடும்பத்தார் தங்குவதற்கு சட்ட விதிகள் அனுமதியளிப்பதை அறிந்து, தனது மகனை தன்னுடனே தங்க வைத்தார்.

தந்தையுடன், 8க்கு 8 அடி அளவுள்ள குறுகிய சிறையில் இருந்தபடியே படித்து வந்த பியூஷ், ஐஐடி நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில், 453-வது ‘ரேங்க்’ (எஸ்டி பிரிவு) எடுத்து, தேர்வு பெற்றுள்ளார். 

இந்தியாவின் முதன்மையான ஐஐடி கல்வி நிறுவனத்தில் அவர் விரைவில் பொறியியல் மாணவராக சேர உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, ‘திறந்தவெளிச் சிறைகளில் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமை யாக இருக்கும். இரவு 11 மணிக் கெல்லாம் விளக்கு அணைக்கப் படும்.

ஜன்னல் வழியாக வரும் சன்னமான வெளிச்சத்தில் தான் படிப்பேன். அதிகாலை 4 மணி வரைக்கும் தினமும் படித்தேன். அறை சிறியது என்பதால், நான் படிக்கும் வரை அப்பா வெளியே இருந்தபடி நேரத்தை கழிப்பார். 

இதற்கு முன், நான் கைதியின் மகன் என்றும், சிறையில் தங்கி படித்தேன் என்பதையும் யாரிடமும் கூறவில்லை. ஆனால், தற்போது அதை உரக்கக் கூறுவேன். எனக்காக என் தந்தை ஈடு இணையில்லா தியாகத்தைச் செய்துள்ளார்.

அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவருக்கு புதிய வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என்பதே என்னுடைய ஒரே குறிக்கோளாக உள்ளது’ என்றார்.
Tags:
Privacy and cookie settings