குடிபோதையில் கார் ஓட்டி தொழிலாளி உயிரை பறித்த பெண் கைது !

சென்னை தரமணியில் குடிபோதையில் கார் ஓட்டி வந்து மோதியதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யா என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
திருவான்மியூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் முனுசாமி ,45. முனுசாமிக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், கார்த்தி என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். 

இவர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு தனது நண்பர் சரவணனுடன் வேலைக்கு சென்றுள்ளார். தரமணி அருகே ராஜீவ்காந்தி சாலையை கடக்க முனுசாமி முயற்சி செய்துள்ளார்.

அப்போது அங்கு வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று முனுசாமியின் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனால் பதற்றம் அடைந்த சரவணன் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, அங்கு வந்த ஒருவர் தான் வைத்திருந்த பைக் மூலமாக காரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தார். காரில் மூன்று பெண்கள் இருப்பது தெரியவந்தது. 

அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை காரில் இருந்து வெளியே இழுத்த போது தான் அவர்கள் குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இத்திற்கு வந்த போலீஸார், 3 பெண்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் அவர்கள் சேத்துப்பட்டைச் சேர்ந்த ஐஸ்வர்யா, 26, சோனிஜென் சுஷ்மா, 31 உள்பட 3 பெண்கள் என்பதும், இவர்கள் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. 

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மூன்று பெண்களையும் உடனடியாக மீட்டுச் சென்றதாகவும், இறந்தவரின் உடல் சுமார் ஒரு மணி நேரம் அளவில்

அதே இடத்தில் இருந்ததாகவும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். முனுசாமியின் உடல் தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

ஆடி காரை ஓட்டி வந்த பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா என்பதும் அவர் தொழில் அதிபரின் மகள் என்று கூறப்படுகிறது. அந்த வாகனம் தற்போது அடையாறில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதனிடையே தொழிலதிபர் மகள் ஐஸ்வர்யாவை கைது செய்துள்ள போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக கிண்டி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings