சுவாதியை கொன்று விட்டு ஆடு மேய்த்த ராம்குமார் !

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை படுகொலை செய்து விட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு தப்பிச் சென்ற கொலையாளி ராம்குமார், 
அங்கே போய் ஒன்றும் அறியாக அப்பாவி போல ஆடு மேய்த்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை நுங்கம்பாக்கத்தில் 

இளம்பெண் சுவாதி ஜூன் 24ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் ரயில் நிலையத்தில் அருகில் இருந்த வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் கொலையாளி தப்பியோடும் காட்சிகள் பதிவாகின.

அதன் அடிப்படையில், போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர். 10 தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சல்லடை போட்டு தேடி வந்தது போலீஸ். 

இந்த கொலை போலீசுக்கு பெரும் சவாலாக இருந்தது. கொலையாளியின் முகம் சிசிடிவி கேமராக்களில் முகம் தெளிவாக பதிவாகாததால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், குற்றவாளியின் சற்றே தெளிவாக வரையப்பட்ட புகைப்படத்தை காவல் துறையினர் வெளியிட்டனர். அனைத்து காவல் நிலையங்களுக்கும் புகைப்படம் அனுப்பப்பட்டது. கொலையாளியின் புகைப்படம் ஊடகங்களிலும் பிரசுரிக்கப்பட்டது. 

சூளைமேட்டில் இருந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வரை விசாரணை நடத்தியதில் மேன்சனில் தங்கியிருந்த ராம்குமார் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக மேன்சன் காவலாளியும், 

நிர்வாகியும் தகவல் அளித்தார். சுவாதி படுகொலையை அடுத்து ராம்குமார் சென்னை சூளைமேட்டில் இருந்து செங்கோட்டைக்கு சென்றுள்ளார். 

மேன்சன் பதிவேட்டில் இருந்த விலாசத்தின் அடிப்படையில் நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தனிப்படை போலீசாரும் செங்கோட்டை விரைந்தனர்.

சுவாதியை கொலை செய்துவிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற ராம்குமார் வீட்டை விட்டு வெளியேவரவில்லை என்று கூறப்பட்டது. எனினும், செங்கோட்டையில் ராம்குமார் ஆடு மேய்த்து வந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆடு மேய்து விட்டு வீடு திரும்பிய ராம்குமாரை அடையாளம் கண்ட போலீஸ், இரவு வரை காத்திருந்து பிடித்துள்ளனர். 

போலீசார் தன்னை நெருங்கிவிட்டதை அறிந்த ராம்குமார் வீட்டின் உள்ளேச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போலீசார், ரத்தவெள்ளத்தில் விழுந்துக் கிடந்த ராம்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட ராம்குமார், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராம்குமாருக்கு இன்று அதிகாலை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பலத்த காயமடைந்திருந்த ராம்குமாருக்கு கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்டன. 

ராம்குமார் இன்னும் மயக்க நிலையில் இருப்பதாகவும் அவரால் தற்போது பேச முடியாது என்றும் மருத்துவமனை டீன் கூறியுள்ளார். ஒரிரு நாளில் உடல்நலம் தேறி ராம்குமார் பேசத்தொடங்குவார் என்றும் மருத்துவமனை டீன் கூறியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் ஆலங்குளத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து பட்டம் பெற்றவர் என்று கூறப்படுகிறது. 

ஒருதலை காதல் விவகாரத்தினாலேயே இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையில் ராம்குமாரின் நண்பருக்கும் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

சுவாதி படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தனது மகன்தான் என ராம்குமாரின் தந்தை அறிந்திருந்ததாக கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் சிலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆனால் அப்பாவியான ராம்குமார்தான் இப்படி கொடூர கொலையை செய்தாரா என்பது ஆச்சரியமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings