தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்றுக்கொள்வேன் என கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 41 இடங்களில் போட்டியிட்டு வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது.
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விலக வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தினர். மேலும் இதே காங்கிரஸ் மேலிடத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.
நெருக்கடி முற்றியதை தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, கட்சி மேலிடத்தில் கடிதம் அளித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
இதனையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற இளங்கோவனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற பீட்டர் அல்போன்ஸ்,
தங்கபாலு, செல்வகுமார் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் போட்டியில் குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாயின.
இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக யாரை நியமனம் செய்யலாம் என்பது குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசனையில் ஈடுபட்டது.
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அண்மையில் வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பியதைத் தொடர்ந்து,
தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினர்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, இன்று டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார்.
அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தற்போதுள்ள சூழ்நிலை, கட்சி வளர்ச்சி குறித்து விளக்கினார். மேலும், புதிய தலைவர் நியமனம் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, ‘தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும். தலைவர் பதவியை எனக்கு அளித்தால் ஏற்றுக்கொள்வேன். ஆனால், அதற்கு சாத்தியம் இல்லை’ என்றார்.
குஷ்புவின் இந்த அறிவிப்பு, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.