சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தங்கியிருந்த ஏ.எஸ்.மேன்சனை காண சூளைமேட்டில் மக்கள் கூட்டம் திரண்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் இன்ஜீனியர் கடந்த மாதம் 24-ம் தேதி அன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.
அதன்பின் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சுவாதியைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் என்ற நபரை ஜூலை 2 அதிகாலை நெல்லை மாவட்டம்
செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் போலீஸார் கைது செய்தனர். சுவாதி கொலையை தான் செய்ததாக ராம்குமார் ஒப்புக்கொண்டதாக போலீஸார் வட்டாரம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், ராம்குமார் சென்னை சூளைமேடு, சவுராஷ்டிரா நகரில் உள்ள ஏ.எஸ். மேன்சனில் (விடுதி) கடந்த மூன்று மாதமாக தங்யிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
அவ்விடுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கியிருந்துள்ள சதிஷ் ராஜா இதுகுறித்து கூறுகையில், "கடந்த சனிக்கிழமை இரவு முதல் இப்பகுதியில் காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இன்று காலை 8.30 மணிக்கே வெளியே செல்ல அனுமதித்தனர்'' என்றார்.
பிடிபட்ட ராம்குமார் விடுதியின் இரண்டாம் தளத்திலுள்ள 404 என்ற அறையில் தங்கியிருந்தார். குற்றவாளி பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் காவல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராம்குமார் தங்கியிருந்த ஏ.எஸ்.மேன்சனை காண சூளைமேட்டில் மக்கள் கூட்டம் திரண்டது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.