கறி போட தாமதம்... நாய்கள் ஓனரை கடித்துக் கொன்றன !

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் ரயில்வே பாதுகாப்பு ஐஜியின் அலுவலக உதவியாளர் பரிதாபமாக இறந்தார். சோளிங்கர் அடுத்த பானாவரம் அருகே உள்ள காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன்,56. 
கறி போட தாமதம்... நாய்கள் ஓனரை கடித்துக் கொன்றன !
இவர் சென்னையில் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஐஜி அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு சிவகாமி, 48 என்ற மனைவியும், ஒரு மகள், மகனும் உள்ளனர்.

கிருபாகரனுக்கு சொந்தமாக வீட்டின் அருகே மாந்தோப்பு உள்ளது. இங்கு அவர் நாய்களை வளர்த்து வந்தார். 

தினமும் வேலை முடிந்து திரும்பியதும் இரவு 8 மணி அளவில் கிருபாகரன் மாந்தோப்புக்கு சென்று அந்த நாய்களுக்கு இறைச்சி மற்றும் உணவு வழங்குவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய நாய் ஒன்றை வாங்கியுள்ளார். செவ்வாய் கிழமையன்று இரவு நாய்களுக்கு இறைச்சி போட தாமதமாகி விட்டது.

நாய்கள் உணவுக்காக கிருபாகரன் வருவதை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தன. கோரப்பசி ஏற்பட்டதால் அவை வெறியுடன் இருந்தன. 
நாய்கள் பசியுடன் இருக்குமே என்று கருதிய கிருபாகரன் இறைச்சி, உணவு எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக இரவு 10 மணியளவில் மாந்தோப்புக்கு சென்றார்.

அவரை கண்டதும் 2 நாய்களும் பாய்ந்து சென்று கிருபாகரனை கடித்து குதறின. இதனை சற்றும் எதிர்பாராத கிருபாகரன் அலறினார். 

ஆனால் கோர பசியில் இருந்த நாய்கள் தங்களை ஆசையாக வளர்த்த எஜமான் என்றும் பாராமல் அவரை கடித்து குதறியதில் கிருபாகரன் அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தோட்டத்துக்கு சென்ற கிருபாகரன் வீடு திரும்ப தாமதமானதால் குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது அவர் நாய்கள் கடித்ததில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பானாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிருபாகரனின் சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களையும் நாய் கடிக்க பாய்ந்தது. 

பின்னர் அந்த நாயை கிருபாகரனின் மனைவி சிவகாமி கட்டுப் படுத்தினார். இதைத் தொடர்ந்து போலீசார், கிருபாகரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிருபாகரன் வளர்த்தது ராட்வைலர் வகை நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. ஜெர்மன் நாட்டு இனத்தைச் சேர்ந்த இந்த நாய்கள் உயரம் சற்று குறைவாக இருந்தாலும் வாய்ப் பகுதி நீளமாக இருக்கும்.

கடிக்கும் போது மனித எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு பலம் வாய்ந்த தடைகளைக் கொண்டவை என்று கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, இந்த வகை நாய்களை காவல் பணிக்காக வளர்ப்பார்கள். ராட்வைலர் நாய்க்குட்டிகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப் படுகின்றன. 

இந்த வகை நாய்கள் மனிதர்களுடன் எளிதில் பழகாது. முறையான பயிற்சி அளித்தாலும் இவை கட்டளைக்கு அடங்கி நடக்கும் என்று கூற முடியாது.

சரியான நேரத்துக்கு இரை கொடுக்க வில்லை என்றாலோ அல்லது அதற்கு எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டாலோ கடித்து விடும். அதன் குணங்களை அறிந்து அருகில் செல்வது நல்லது என்று எச்சரிக்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.
Tags:
Privacy and cookie settings