வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி.. முதல்வர் கறார் !

தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று தலைமைச் செயல கத்தில் நடந்தது. 'தேர்தல் வாக்குறு தியில் சொல்லப் பட்ட இலவசங் களை நிறை வேற்ற வதற்குத் தேவையான நிதியை, 
துறைகளில் இருந்து பெருக்குவதற்கு முயற்சி எடுங்கள். அமைச்சர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும்' என கண்டிப்பு காட்டியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றது. இதன் முதல் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. 

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர். 

தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், நிதித்துறைச் செயலர் சண்முகம், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில், அரசின் புதிய இலவச அறிவிப்புகளை எப்படி நிறைவேற்றுவது, அரசின் கடன் சுமையை எவ்வாறு ஈடுகட்டுவது, துறை அமைச்சர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது. 

'அரசின் வருவாயைப் பெருக்குவது குறித்த கவலைதான் முதல்வர் முகத்தில் தெரிந்தது' என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.

தொடர்ந்து அவர் நம்மிடம், " கடந்த ஆட்சியில் இலவச மிக்சி, கிரைண்டர் ஆகியவை வழங்கியதில் அரசின் கடன் சுமை ஏகத்துக்கும் எகிறிவிட்டது. தற்போதுள்ள சூழலில் இரண்டரை லட்சம் கோடி கடன் சுமையோடு அரசு உள்ளது. 

இந்த சட்டமன்றத் தேர்தலில் 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டர் வழங்குவது, அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் செல்போன் வழங்குவது, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் இருக்கிறார். 

மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும்விதமாக, இரண்டு மணி நேரம் விற்பனையைக் குறைத்தும், 500 கடைகளை மூடியும் நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. 

இந்த இழப்பை ஈடுகட்டுவதற்கு, வேறு வழிகளில் நிதியைப் பெருக்கினால் மட்டுமே சாத்தியம் என முதல்வர் உறுதியாக இருக்கிறார். அதுகுறித்த ஆலோசனைகளை துறை அமைச்சர்களுக்கு வழங்கினார்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், வணிகவரித்துறை அமைச்சர் வீரமணியிடம் பேசிய முதல்வர், ' உங்கள் துறையில் வருவாயைப் பெருக்க ஏராளமான வழிகள் இருக்கின்றன. 

வரி ஏய்ப்பை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். வரி வசூலிப்பில் உள்ள லீக்கேஜை சரி செய்ய முயற்சி எடுங்கள்' எனப் பேசினார். 

அவரும், ' உடனே அதிகாரிகளிடம் பேசுகிறேன் அம்மா' என்றபடி அமர்ந்துவிட்டார். இப்படியே ஒவ்வொரு துறையிலும் உள்ள வருவாய் வரக் கூடிய வழிகளைப் பற்றி விவாதித்தார் முதல்வர்.

மதுவிலக்கு தொடர்பாக மேலும் சில அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவதற்கு வாய்ப்பு அதிகம். அதற்காகவே, அரசுத் துறைகளின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டித் தர வேண்டும் எனக் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் முதல்வர்.

தமிழ்நாடு அரசின் மினரல் நிறுவனமான டாமின் மூலம், ' அரசுக்கு எங்கெல்லாம் இழப்பு ஏற்படுகிறது' எனக் கண்டறியும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. அமைச்சர்களுக்கு அறிவுறுத்தும்விதமாகவே கூட்டம் நடந்தது" என விளக்கினார். 

அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து, அனைத்து துறைகளிலும் அரசுக்கு வருவாய் வர வேண்டிய வழிகளை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர் அதிகாரிகள். 

இதில், ' அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லாவிட்டால், அவர்களின் பதவி பறிக்கப்படவும் வாய்ப்பு அதிகம். 

அதனால்தான், அறிவுறுத்தல் என்ற பெயரோடு கூட்டத்தை நிறைவு செய்தார் முதல்வர்' என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள்.
Tags:
Privacy and cookie settings