மாணவர்கள் மனப்பாடம் செய்து வீட்டுப் பாடங்களை செய்யாமல், செயல்முறை மூலம் கல்வி கற்கும் புதிய முறையை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிமுகப் படுத்தி யுள்ளது.
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வீட்டுப் பாடம் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாணவர்கள் மனப்பாடம் செய்து, நோட்டு புத்தகங்களில் எழுதி ஆசிரியர்களிடம் சமர்பித்து வருகின்றனர்.
பல்வேறு மாணவர்கள் வீட்டிலிருந்து அதனை செய்ய முடியாததால், பள்ளி முடிந்ததும் டியூசன் சென்று வீட்டுப்பாடம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் வீட்டிலிருந்த வாறே பாடங்களை மனப்பாடம் செய்யாமல், செயல்முறை பயிற்சிகள் மூலம் கல்வி கற்கும் புதிய முறையை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, பெற்றோருடன் இணைந்து கடிதங்கள் எழுதுதல், புதிர்களுக்கான விடை காணுதல், வீட்டு வரவு-செலவு கணக்குகளை பார்த்தல், சமையல் செய்தல், செய்தித் தாள்கள் படித்தல்,
ஆவணப் படங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தல் போன்ற புதிய செயல்முறை பயிற்சிகள் மூலம் கல்வி கற்கலாம்.
இது குறித்து, சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்று பெற்றோர்களுடன் சேர்ந்து, வீட்டு கணக்குகளை பார்ப்பதால், கணக்குப் பாடத்தை மாணவர்கள் எளிமையாக புரிந்து கொள்வார்கள்.
செய்தித்தாள் படிப்பது, ஆவணப் படங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதால்,
சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை புரிந்து கொள்வதோடு, அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை காணும் வகையில் மாணவர்கள் செம்மைப் படுவார்கள்.
எனவே, இந்த புதிய முறையை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.