அ.தி.மு.க வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது அன்வர்ராஜா எம்.பியின் மூன்றாவது திருமணம். ' அன்வர் ராஜாவின் சொத்துக்களுக்கு பங்கு கேட்டு புதிதாக ஒருவர் வந்துள்ளதை,
அவரின் குடும்பத்தினர் விரும்பவில்லை' என்கின்றனர் ராமநாதபுரம் அ.தி.மு.கவினர். ராமநாதபுரம் அ.தி.மு.க எம்.பியும் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளருமான அன்வர்ராஜா, சில தினங்களுக்கு முன்பு மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய ராமநாதபுரம் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "எம்.பியின் முதல் மனைவி உயிரோடு இருக்கிறார். அவரை முன்பே விவாகரத்து செய்துவிட்டார். இரண்டாவது மனைவி தாஜிதா பேகம் இறந்து ஒரு வருடம் கூட முடியவில்லை.
இவர்களுக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஐந்து பேரப் பிள்ளைகள் உள்ளனர். ராமநாதபுரத்தைச் சுற்றிலும் அன்வர்ராஜாவுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை என்ற பெயரில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, பி.எட் கல்லூரி, பள்ளிகள் ஆகியவை உள்ளன. இவை தவிர, நிலம், வீடு என சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் உள்ளன.
தற்போது திருமணம் செய்த சமீரா சுல்தானுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். ' இவர்கள் சொத்துக்கு பங்கு கேட்டு வந்துவிடுவார்களோ' என அன்வர்ராஜாவின் வாரிசுகள் பயந்தனர்.
எம்.பியின் ஒரு மகளுக்கு, அரசுத் துறையில் பதவி வகிக்கும் ஒருவரது குடும்பத்தில் சம்பந்தம் வைத்துள்ளனர். அவர்களுக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை. திருமண நிகழ்வுக்கும் அவர்கள் வரவில்லை.
அன்வர்ராஜாவை எதிர்த்து எதுவும் பேசிவிட முடியாது' என்பதால் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். எம்.பி யின் மூன்றாவது மனைவி, மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 35 என ஒரு சிலர் சொல்கின்றனர்.
எம்.பியோ, ' அவருக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டது' என்கிறார். கடந்த ஆறு மாதங்களாகவே திருமணம் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
பேச்சு வார்த்தை முடிவில், 'அன்வர் ராஜாவின் சொத்துக்கள் எதுவும் சமீராவுக்குக் கிடையாது. எம்.பி பதவியில் இருந்து வரும் பென்சன் மட்டுமே, அவருக்குச் சென்று சேரும். வேறு எந்த வகையிலும் உரிமை கொண்டாடக் கூடாது' என முடிவு செய்துள்ளனர்.
அவரும் இதை ஏற்றுக் கொண்டார். ஆனால், அவரது இந்தச் செயல், வீட்டில் உள்ள பேரன், பேத்திகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தாதா?" எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து அன்வர்ராஜா எம்.பியிடம் பேசினோம். " என்னுடைய குடும்பத்தினரின் சம்மதத்துடன்தான் திருமணம் நடந்தது.
அது தொடர்பான புகைப்படங்களும் வெளி வந்துள்ளன. ராமநாதபுரத்தில் எனக்கு வேண்டாதவர்கள் எவ்வளவோ சொல்வார்கள். பெண் பெயரையும் வயதையும் தவறாக எழுதுகிறார்கள்.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சம்பந்தமில்லை என்று சொல்வது விஷமத்தனமான பேச்சு. அனைவரும் இணைந்துதான் இந்த முடிவை எடுத்தார்கள்" என்றார் நிதானமாக.
ராமநாதபுரத்தைப் பொறுத்தவரையில், மீனவர் பிரச்னை உள்பட தொகுதி மக்களுக்காகக் குரல் கொடுப்பவர் அன்வர்ராஜா. அவரை முன்னிறுத்தி எழுந்துள்ள மூன்றாவது திருமணம் தொடர்பான விவாதம் இன்னும் ஓயவில்லை.