ஓசூரில் கொள்ளையர்கள் தாக்கி உயிரிழந்த தலைமைக் காவலர் முனுசாமியின் மகளுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது.
ஓசூரில் கடந்த 15-ம் தேதி செயின் பறிப்பு கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் முனுசாமி என்ற தலைமைக் காவலர் உயிரிழந்தார்.
அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். முனுசாமியின் மகள் ரக் ஷனாவின் உயர்கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வில் 1,200-க்கு 1,182 மதிப்பெண்கள் எடுத்திருந்த முனுசாமி மகள் ரக் ஷனா, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.
198.25 கட்-ஆப் மதிப்பெண்ணுடன் தரவரிசைப் பட்டியலில் 565-வது இடத்தில் இருந்தார். நேற்று நடந்த கலந்தாய்வில் அவர் தனது தாய் முனிலட்சுமியுடன் கலந்துகொண்டார்.
அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது. ரக்ஷனா கூறும் போது, என்னை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என்பது அப்பாவின் கனவு.
சிறு வயதில் இருந்தே எப்போதும் அதைப் பற்றி தான் பேசுவார். சிறந்த மருத்துவராகி, அப்பாவின் கனவை நிறைவேற்றுவேன் என்று கண்ணீர் மல்க கூறினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்பதுதான் ரக்ஷனாவின் விருப்பமாம். அதனால், அங்கு இடம் தருமாறு கோரிக்கை வைத்திருப்பதாக அவரது தாய் கூறினார்.